பஸ் கட்டண உயர்வை திரும்ப பெறும் வரையிலும் போராட்டம் தொடரும் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

பஸ் கட்டண உயர்வை திரும்ப பெறும் வரையில் போராட்டம் தொடரும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
பஸ் கட்டண உயர்வை திரும்ப பெறும் வரையிலும் போராட்டம் தொடரும் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
Published on

சென்னை,

சென்னை பெரவள்ளூர் சதுக்கத்தில் சாலை மறியலில் ஈடுபட்டபோது கைது செய்யப்பட்ட மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கண் துடைப்புக்காக பஸ் கட்டண குறைப்பு என்று ஒரு கபட நாடகத்தை நடத்தியிருக்கிறார்கள். எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகள், பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் கோரிக்கைகளை ஏற்று இந்த கட்டண குறைப்பு செய்யப்பட்டிருக்கிறது என்று சொல்லியிருக்கிறார்கள். இதை நாங்களும் நம்பவில்லை, பொதுமக்களும் நம்புவதற்கு தயாராக இல்லை.

தி.மு.க. ஆட்சியில் நிலுவையில் வைத்திருந்த தொழிலாளர்களுக்கான நிலுவைத்தொகை தொள்ளாயிரம் கோடி ரூபாயை கொடுத்ததாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சொல்லியிருப்பதாக செய்திகள் வந்திருக்கிறன. ஆனால், உண்மையில் 2006-ல் தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றபோது, 501.56 கோடி ரூபாய் தொழிலாளர்களின் வைப்புத்தொகையை அ.தி.மு.க. அரசு பாக்கி வைத்திருந்தது. அதை தி.மு.க. அரசு தான் திருப்பி செலுத்தியது. அதுமட்டுமல்ல, அ.தி.மு.க. அரசு 397 கோடி ரூபாய் நஷ்டத்தில் போக்குவரத்துக் கழகங்களை விட்டுச்சென்றது.

இருந்தாலும், 2006 முதல் 2011-ம் ஆண்டு வரையிலான கருணாநிதி தலைமையிலான தி.மு.க. ஆட்சியின்போது, போக்குவரத்துத்துறை என்பது பொதுமக்களுக்கு சேவை செய்யும் துறை என்பதை கருத்தில் கொண்டு, பஸ் கட்டணத்தில் ஒரு சல்லிகாசு கூட உயர்த்தப்படவில்லை.

தீவிர போராட்டம்

தி.மு.க. ஆட்சியில் கட்டண உயர்வு எதுவும் இல்லாத நேரத்திலும், தினசரி பஸ் கட்டண வருவாய் ரூ.20 கோடியே 46 லட்சமாக அதிகரித்தது. அந்தளவுக்கு மக்களின் நண்பனாக போக்குவரத்துக்கழகத்தை மாற்றியது தி.மு.க. அரசு. எனவே, இப்போதைய கட்டண உயர்வுக்கு, எடப்பாடி பழனிசாமியின் நிர்வாக தோல்விதான் காரணமே தவிர, போக்குவரத்துக் கழகங்களின் தோல்வி அல்ல என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

எனவே, இந்த குதிரை பேர ஆட்சிக்கு நான் ஒரு எச்சரிக்கையாக தெரிவிக்க விரும்புவது, உடனடியாக பஸ் கட்டண உயர்வை முழுமையாக திரும்ப பெறவேண்டும். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள், பல்வேறு கட்சிகளை சேர்ந்த தோழர்கள் மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டு, சிறைகளில் அடைக்கப்பட்டு இருக்கிறார்கள். எனவே, அவர்கள் மீது தொடரப்பட்டுள்ள வழக்குகளை எல்லாம் உடனடியாக திரும்ப பெற்று, அனைவரையும் விடுவிக்கவேண்டும். இந்த கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், அடுத்த கட்டமாக இதைவிட தீவிரமான போராட்டங்களை முன்னெடுக்க திட்டமிட்டு இருக்கிறோம். எனவே, விரைவில் மீண்டும் அனைத்து கட்சி கூட்டம் கூட்டி, அதற்கான அறிவிப்பை வெளியிடுவோம்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.

இதையடுத்து மு.க.ஸ்டாலினிடம் நிருபர்கள் கேட்ட கேள்வியும் அதற்கு அவர் அளித்த பதிலும் வருமாறு:-

தனியார் பஸ் முதலாளிகளிடம் பேரம்

கேள்வி: ஊதிய உயர்வு உள்ளிட்ட நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்துத் தொழிலாளர்கள் அண்மையில் நடத்திய போராட்டத்தின் மதிப்பை கெடுப்பதற்காக, இந்த அரசு பஸ் கட்டண உயர்வை அறிவித்து இருக்கிறதா?

பதில்: அந்த பிரச்சினை நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு போடப்பட்டு இருக்கிறது. எனவே, ஒருவேளை நீங்கள் கேட்டதுபோல, அந்த பிரச்சினையை திசை திருப்பவும், மூடி மறைக்கவும் இப்படி திட்டமிட்டு செய்திருக்கலாம். ஆனால், என்னை பொறுத்தவரையில், இந்த ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள எம்.எல்.ஏ.க்களிடம் பேரம் பேசி, அவர்களுக்கு பணம் கொடுப்பதற்காக, அரசு பஸ் கட்டண உயர்வை அறிவித்து, அதன் மூலமாக தனியார் பஸ் முதலாளிகளிடம் பேரம் பேசப்பட்டு, பெரிய தொகைகள் வாங்கப்படுவதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.

அதுமட்டுமல்ல, முதல்-அமைச்சராக உள்ள எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் அனைவரும் புதிது புதிதாக பஸ் ரூட்டுகள் வாங்கி இருப்பதாகவும் சில செய்திகள் வந்திருக்கின்றன. விரைவில், யார் யாருக்கு எந்தெந்த பினாமிகளின் மூலமாக இவையெல்லாம் வழங்கப்பட்டு இருக்கின்றன என்பதை கண்டறிந்து, நீதிமன்றத்தை நாடவும் நாங்கள் தயாராக இருக்கிறோம்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் பதில் அளித்தார்.

தொடரும்

முன்னதாக தன்னுடன் கைதாகி திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் மத்தியில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

நம்மை அடைத்து வைக்க சிறைகளில் இடம் இல்லை என்ற காரணத்தால், போலீசார் விடுதலை செய்திருப்பதாக தெரிவித்து இருக்கிறார்கள். அரசின் கணக்குப்படி, வெறும் 25 ஆயிரம் பேர் கைதாகி இருப்பதாக தவறான தகவலை சொல்கிறார்கள். தி.மு.க. சார்பில் தமிழகத்தில் அமைக்கப்பட்டு இருக்கின்ற 62 மாவட்டங்களில், ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தபட்சம் 10 ஆயிரம் பேர் போராட்டத்தில் ஈடுபட்டார்கள் என்று கணக்கிட்டால், ஏறக்குறைய 6 லட்சம் பேர் என்ற எண்ணிக்கையையும் கடந்து சிறை சென்றிருப்பதாக கணக்கு வருகிறது.

எடப்பாடி பழனிசாமி அனைத்து கட்சிகளையும் விரைவில் கூட்டி, ஒரு நல்ல முடிவெடுத்து, இந்த பஸ் கட்டண உயர்வை ரத்து செய்யவேண்டும். ரத்துசெய்வதற்கு அருகதை இல்லை, வாய்ப்பில்லை என்றால், தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு வீட்டுக்குப் போகவேண்டும். அப்படியும் ராஜினாமா செய்யவில்லை என்றால், நீங்கள் ராஜினாமா செய்யும் வரை அல்லது பஸ் கட்டணத்தை குறைக்கும் வரை எங்களுடைய போராட்டம் தொடரும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com