

சென்னை,
அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் மலேசியாவில் ஆராய்ச்சி படிப்பு படித்து வரும் தமிழ்நாட்டு மாணவர் பாரதிதாசன், இந்த அரசு தனக்கான கல்வி உதவித்தொகையை வழங்காமல் இழுத்தடித்ததை சுட்டிக்காட்டி இருந்த நிலையில், தற்போது இந்த ஆட்சியாளர்கள் அவருடைய கல்வியையே கேள்விக்குறியாக்குவதாக கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் என்ன அடிமையா இரு படிக்காதன்னு சொல்லிவிடுங்கள் என்று வீடியோ வெளியிட்டு சமூக நீதித்துறை அமைச்சர் வன்னிஅரசுக்கு கண்ணீருடன் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-
“எதைப் பற்றியும் கவலைப்படாமல் படியுங்கள். உங்களுக்கு என்ன தேவையென்றாலும் நமது அரசு நிறைவேற்றித் தரும்” என்ற நம்பிக்கையை முதல்-அமைச்சராக ஒவ்வொரு மேடையிலும் விதைத்தவன் என்ற வகையில், இந்தத் தம்பியின் கண்ணீர் நெஞ்சைக் கனக்கச் செய்கிறது. அவர் கேட்பது உதவியில்லை, அரசு சார்பில் அவருக்கு உறுதியளிக்கப்பட்ட உரிமையைத்தான் கோருகிறார். ஆட்சி மாற்றம் ஏற்பட்ட காரணத்தாலேயே ஒரு மாணவரின் பல ஆண்டு உயர்கல்விக் கனவு பாழாகக் கூடாது.
ரோகித் வெமுலாவுக்கு நடந்தது போல எனக்கும் நடக்கிறது என்கிறார். எங்களுக்கு எதிர்க்கட்சியாகவே இருந்தாலும் அப்படி ஒரு அவப்பெயரைத் த.வெ.க. அரசு சுமக்க வேண்டாம் என்பதே என் வேண்டுகோள். மாணவர் பாரதிதாசனுக்குத் தேவைப்படும் நிதியை வழங்கமுடியாது என்றால் அதனை முதல்-அமைச்சர் வெளிப்படையாக அறிவித்துவிடவும். தி.மு.க.வும் தமிழ்நாட்டு மக்களும் அந்த மாணவருக்கான கல்விக் கட்டணத்தைக் கட்டிப் படிக்க வைப்போம்!
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.