

சென்னை,
மலேசியாவில் முனைவர் பட்டம் படிக்கும் மாணவர் பாரதிதாசன், தனது 2-ம் ஆண்டு படிப்பிற்கு கல்வி உதவித்தொகையை அரசு வழங்கவில்லை என்று சமூகவலைதளத்தில் காணொளி வெளியிட்டார். அதற்கு தமிழக சமூகநீதி துறை விளக்கம் வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:-பாரதிதாசனின் செலவின கோரிக்கை ரூ.19.50 லட்சம் தொடர்பாக, பரிந்துரைத்து அனுப்பும்படி தெரிவித்து, அவர் படிக்கும் பல்கலைக்கழகத்திற்கு மின்னஞ்சல் கடிதம் 17-ந் தேதி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன் நகல் அந்த மாணவருக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. பல்கலைக்கழகத்திடம் இருந்து பதில் கிடைத்ததும் கல்வி உதவித் தொகை விடுவிக்கப்படும். இந்தத் தகவலும் மின்னஞ்சலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் மாணவர் பாரதிதாசன் சமூகவலைதளத்தில் காணொளி ஒன்றை பதிவுசெய்து, உண்மைக்கு மாறான தகவல்களை பதிவு செய்துள்ளார். மாணவருக்கு இதுவரையில் முதலாமாண்டு படிப்பிற்கு ரூ.36 லட்சம் மற்றும் 2-ம் ஆண்டிற்கு ரூ.12 லட்சம் என மொத்தம் ரூ.48 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், மாணவரின் காணொளியில் குறிப்பிட்டுள்ள கருத்துக்கள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானதாகவும், அவப்பெயர் ஏற்படுத்தும் நோக்கத்துடனும் உள்ளது.
கல்வி உதவித்தொகை திட்டங்களை பொறுத்தவரை, சமூக நீதி துறை இதுவரை இல்லாத அளவில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. எனவே மாணவரின் இந்த காணொளியானது உண்மைக்கு மாறான தகவல்களுடன் பல்வேறு மாணவர்கள் பயன்பெற்று வரும் இத்திட்டத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்தும் நோக்கத்துடன் உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.