

சென்னை,
இந்தியா முழுவதும் மே.3ஆம் தேதி நீட் மருத்துவ படிப்பிற்கான நுழைவுத்தேர்வு நடைபெற்றது. 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த தேர்வை எழுதியிருந்த நிலையில், வினாத்தாள் கசிவு காரணமாக நாடு முழுவதும் கடந்த 3-ம் தேதி நடத்தப்பட்ட நீட் தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும், மறு தேர்வு நடத்தப்படும் என்றும் தேசிய தேர்வு முகமை அறிவித்தது.
இது மாணவர்கள், பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் கடும் விமர்சனங்களை உருவாக்கியது. இந்த நிலையில் வரும் ஜூன் 21-ம் தேதி நீட் மறுதேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின் முழு விவரம் பின்வருமாறு:-
மருத்துவர் ஆக வேண்டும் என்ற லட்சியம் முடியாமல் போகும்போது, ஒரு சில மாணவ-மாணவிகள் தவறான முடிவுகளை எடுத்து வருகிறார்கள். இது தவறு என்று பலமுறை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும் வலியுறுத்தி வந்துள்ளோம்.
துரதிஷ்டவசமாக, சேலம் மாவட்டம், எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கொங்கணாபுரம் ஒன்றியம், வெள்ளாளபுரம் கிராமத்தை சேர்ந்த சேகர் மற்றும் புவனேஷ்வரி தம்பதியரின் 2-ஆவது மகள் கோபிகா, 2024-ம் ஆண்டு 12-ஆம் வகுப்பை முடித்தவர். அவர் நீட் மறுதேர்வு பயத்தால் தற்கொலை செய்துகொண்டார் என்று வந்துள்ள செய்தி எனக்கு மிகுந்த மனவேதனையை அளிக்கிறது.
மருத்துவ படிப்பு மட்டுமல்லாது, மருத்துவ துறை சார்ந்த பல்வேறு பாடப்பிரிவுகள் உள்ளன. அவற்றை தேர்ந்தெடுக்காமல் விபரீத முடிவுக்கு வருவது தவறு. மாணவி கோபிகாவை இழந்து ஆற்றொணா துயரத்தில் இருக்கும் அவரது பெற்றோர்களுக்கு என்ன ஆறுதல் கூறுவது என்று தெரியாமல் கலங்கி நிற்கிறேன்.
எல்லாம் வல்ல இறைவன் மாணவி கோபிகாவின் குடும்பத்திற்கு ஆறுதல் வழங்க வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன். இனியும் இதுபோன்ற தவறான வழிக்கு எந்த ஒரு மாணவ, மாணவியும் செல்ல கூடாது என்று வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளது.