அரசு பள்ளியில் பாம்பு கடித்து மாணவன் பலி - எடப்பாடி பழனிசாமி கண்டனம்

மாணவர்கள் உயிர் போகும் அளவு சம்பவங்கள் நிகழ்வது என்பது கொடுமையின் உச்சம் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அரசு பள்ளியில் பாம்பு கடித்து மாணவன் பலி - எடப்பாடி பழனிசாமி கண்டனம்
Published on

சென்னை,

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;

“திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் பள்ளி வளாகத்தில் புகுந்த விஷப்பாம்பு கடித்ததில் மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் , நாமக்கல் மாவட்டம் குமாரமங்கலத்தில் அரசுப்பள்ளியில் விஷப்பூச்சி கடித்து 3-ம் வகுப்பு மாணவி உயிரிழந்ததாகவும், வரும் செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன. அம்மாணவர்களின் தாய், தந்தையர்க்கும் குடும்பத்தினர்க்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

திமுக ஆட்சியில், அடிப்படைக் கட்டமைப்போ, சுகாதாரமோ கூட இல்லாத அரசுப்பள்ளிகளின் அவல நிலையால், மாணவர்கள் உயிர் போகும் அளவு சம்பவங்கள் நிகழ்வது என்பது கொடுமையின் உச்சம். மேற்கூரை இடிந்து விழுந்து விடுமோ? சுவர் தன் மீது விழுந்துவிடுமோ? தரமற்ற உணவால் பாதிப்பு வருமோ?

போன்ற அச்சங்களுக்கு நடுவே தான் மாணவர்கள் அரசுப்பள்ளிகளுக்கு செல்லவேண்டி இருக்கிறது.

இதற்கு நடுவே, கள்ளகுறிச்சி, ரிஷிவந்தியம் அருகே உள்ள கீழத்தேனூர் அரசுப்பள்ளியில் உயர்நிலை நீர்தேக்கத் தொட்டியை மாணவர்களை வைத்து சுத்தம் செய்ததாக வருகின்ற செய்தி மேலும் அதிர்ச்சி அளிக்கின்றது. இதற்கு கூட ஆட்கள் நியமிக்க வக்கற்ற நிலையில் தான் பள்ளிக்கல்வித் துறை இருக்கிறதா? அரசுப்பள்ளிக்கு மாணவர்கள் படிக்க வந்தார்களா? அல்லது, உங்களுக்கு வேலை செய்ய வந்தார்களா?

மாணவர்களின் பாதுகாப்பை சமரசம் செய்து இப்படிப்பட்ட ஆபத்தான பணிகளில் ஈடுபடுத்துவது குற்றம் என்பதை இந்த விடியா திமுக அரசு உணருமா? இந்த நிலைக்கு அரசுப்பள்ளிகளைத் தள்ளிவிட்ட திமுக அரசு,

"கல்வியிற் சிறந்த தமிழ்நாடு" என ஆடம்பர மேடை அமைத்து, போலியான சுய விளம்பரம் செய்துகொள்வது வெட்கக்கேடானது.

பள்ளிகளின் பராமரிப்பை, சுகாதாரத்தை உறுதிசெய்ய வேண்டிய தனது தலையாய பணியை தூக்கி எறிந்துவிட்டு, ரீல்ஸ் எடுப்பது, கார் ஓட்டுவது, வாக்கிங் போவது என போட்டோஷூட் எடுப்பது மட்டுமே இருக்கும் ஒருவர், குரூப் 2 போன்ற அதிமுக்கிய தேர்வுகளைக் கூட முறையாக நடத்த தெரியாதவர், தமிழ்நாட்டுக்கு முதல்வராக வாய்த்திருப்பது சாபக்கேடு .

விஷப் பூச்சி, பாம்புக் கடியால் உயிரழந்த பள்ளி மாணவர்களின் குடும்பத்தாருக்கான உரிய நிவாரணம் உடனடியாக வழங்கிட வலியுறுத்துகிறேன்.”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com