

சென்னை,
தொழில் அதிபர் வீரமணி வழக்கை சிறப்பு புலனாய்வு குழு கையில் எடுத்துள்ள நிலையில், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பெண் ஒருவர் கண்ணீர் மல்க புகார் மனு அளித்துள்ளார். அந்த புகார் மனுவை படித்து பார்த்த போலீஸ் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
அந்த புகார் மனுவில் வீரமணியால் சீரழிக்கப்பட்டு, தனது மகள் உயிரை மாய்த்துக் கொண்டார் என்று அந்த பெண் பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளார். தொழில் அதிபர் வீரமணி ஏழை, எளிய குடும்பங்களை சேர்ந்த குழந்தைகளுக்கு கல்வி உதவி அளித்து வருவது பற்றி தகவல் அறிந்து அவரை சந்தித்தோம். அவர் எங்கள் மகளின் பள்ளிப்படிப்பு செலவை ஏற்றுக்கொள்வதாக கூறி தேனாம்பேட்டையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படிக்க வைத்தார்.
பிளஸ்-2 படித்தபோது எனது மகளின் கற்பை சூறையாடி விட்டார். இதனால் மனமுடைந்த எனது மகள் உயிரை மாய்த்துக் கொண்டார். இதுபற்றி ஐஸ்அவுஸ் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தேன். ஆனால் வீரமணி தனது செல்வாக்கு, பணபலத்தை பயன்படுத்தி தப்பி விட்டார். தற்போது வீரமணி கைது செய்யப்பட்டு உள்ளதால் எனது மகளுக்கு நடந்துள்ள கொடுமைக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று அந்த பெண் புகார் மனுவில் கூறியுள்ளதாக தெரிகிறது.
வீரமணி கடந்த 2004-ம் ஆண்டு முதல் காமக்களியாட்டங் களில் ஈடுபட்டு வந்துள்ளார் என்று கூறப்படுகிறது. இந்த மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் 10 ஆண்டுகளுக்கு முன்பு நடந்துள்ளது. அவருடைய தாயார் அளித்த புகார் மனு அடிப்படையில் ஐஸ்அவுஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆனால் கடந்த 2017-ம் ஆண்டு ஜல்லிக் கட்டு போராட்டத்தின்போது ஏற்பட்ட கலவரத்தில் ஐஸ்அவுஸ் போலீஸ் நிலையம் தீ வைத்து எரிக்கப்பட்டது. இதில் அந்த போலீஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் தொடர்பான ஆவணங்கள் தீயில் எரிந்து நாசமானது.
இந்தநிலையில் இந்த பெண்ணின் புகார் மனு மயிலாப்பூர் அனைத்து மகளிர் போலீஸ் விசாரணைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. வழக்குப்பதிவு விவரங்கள் கோர்ட்டு இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கும் என்பதால் அந்த வழக்கு ஆவணங்களை கைப்பற்றி அதன் மூலம் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.