அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 1 லட்சத்தை கடந்தது

இந்த ஆண்டு 5 லட்சம் மாணவர்களை சேர்ப்பதற்கான இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 1 லட்சத்தை கடந்தது
Published on

சென்னை,

தமிழக பள்ளிக்கல்வித் துறையின்கீழ் 37,554 அரசுப்பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் சுமார் 52 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படிக்கின்றனர். தற்போது மாணவர்கள் நலன் கருதி கற்றல், கற்பித்தல் சார்ந்து எண்ணும்-எழுத்தும், காலை உணவு, திறன்மிகு வகுப்பறைகள் உள்பட பல்வேறு நலத்திட்டங்களை பள்ளிக்கல்வித்துறை முன்னெடுத்து இருக்கிறது.

இதுமட்டுமல்லாமல், அரசு பள்ளிகள் தனியார் பள்ளிகளுக்கு நிகராக இருக்கும் வகையில் பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகளையும் அரசு மேற் கொண்டு வருகிறது. இதனை முன்னிலைப்படுத்தி அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க ஒவ்வொரு ஆண்டும் அறிவுறுத்தப்படுகிறது.

தற்போது பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை மாணவ-மாணவிகளை சேர்ப்பதற்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், தமிழ்நாட்டில் அரசு, அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. தொடக்கப்பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 2026-27ஆம் கல்வி ஆண்டுக்கு 1ஆம் வகுப்புகளில் 97,737 பேர் சேர்ந்துள்ளனர்.

2 முதல் 8ஆம் வகுப்பு வரை 8,178 மாணவர்கள், மழலையர் வகுப்புகளில் 6,796 மாணவர்கள் என மொத்தம் இதுவரை 1,12,711 பேர் சேர்ந்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு 4 லட்சத்து 30 ஆயிரம் மாணவர்கள் புதிதாக சேர்க்கப்பட்டனர். இந்த ஆண்டு 5 லட்சம் மாணவர்களை சேர்ப்பதற்கான இலக்கு நிர்ணயிக்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com