

சென்னை,
தமிழகத்தில் 37,554 அரசு பள்ளிகள் இயங்கி வருகின்றன. இப்பள்ளிகளில் 52 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். மாணவர்களின் நலன் கருதி கற்றல், கற்பித்தல் சார்ந்து எண்ணும் எழுத்தும், காலை உணவு, திறன்மிகு வகுப்பறைகள் உள்பட பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு அரசின் சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. இதனால் அரசு பள்ளிகளில் கடந்த காலங்களை விட மாணவர் சேர்க்கை தற்போது அதிகரித்து வருகிறது. தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளில் கல்வியின் தரம் உயர்த்தப்படுவதோடு, அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளும் மேம்படுத்தப்பட்டு வருகிறது.
இதற்கிடையில் வரும் கல்வி ஆண்டுக்கான (2026-2027) மாணவர் சேர்க்கையை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கடந்த மார்ச் 1-ம் தேதி தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து, தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்துள்ளது. மழலையர் வகுப்புகளில் 6 ஆயிரத்து 796 பேரும், 1-ம் வகுப்பில் 97 ஆயிரத்து 737 பேரும், 2 முதல் 8-ம் வகுப்பு வரை 8 ஆயிரத்து 178 பேரும் என மொத்தம் 1 லட்சத்து 12 ஆயிரத்து 711 மாணவர்கள் இதுவரை சேர்ந்துள்ளனர். இன்னும் சேர்க்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
சட்டமன்ற தேர்தலையொட்டி ஆசிரியர்கள் பலர் தேர்தல் பணிக்கு சென்றதால் அரசு பள்ளிகளில் சேர்க்கையில் தொய்வு இருந்தது. தற்போது தேர்தல் பணி முடிவடைந்ததால், மாணவர் சேர்க்கை மீண்டும் வேகமெடுத்துள்ளது. தொடர்ந்து மே, ஜூன் மாதங்களிலும் மாணவர் சேர்க்கை நடைபெறும். அரசு பள்ளிகளில் 5 லட்சம் மாணவர்கள் சேர்க்கை நடைபெற இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அதற்கான பணிகளில் ஆசிரியர்கள் ஈடுபட்டு உள்ளனர்.
கடந்த 2025-2026-ம் கல்வி ஆண்டில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை சுமார் 4 லட்சம் எண்ணிக்கை அளவில் இருந்தது. அதனை விட அதிகமாக வருகிற கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கை நடத்த தமிழக அரசின் கல்வித்துறை முழு வீச்சில் ஈடுபட்டு வருகிறது. அரசின் திட்டங்கள் மற்றும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு காரணமாக அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.