சென்னையில் மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: நண்பர் உள்பட 6 பேரிடம் தீவிர விசாரணை

சென்னை போரூர் அருகே கெருகம்பாக்கம் பகுதியில் 17 வயது மாணவி ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை
Published on

சென்னை,

சென்னை போரூர் பகுதியில் 17 வயது மாணவி ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தொடர்பாக 6 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை:

சென்னை பரங்கிமலை பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி சமீபத்தில் நடந்த 12-ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெறவில்லை. அவர் மீண்டும் தேர்வு எழுதுவதற்காக படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வந்த சிறுமி உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்தார். இதுகுறித்து பெற்றோர் விசாரித்தபோது குன்றத்தூர் அருகே நண்பர் ஒருவரை சந்திக்க சென்றபோது, தான் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக கூறி கதறி அழுதார்.

போரூர் அனைத்து மகளிர் போலீசில் புகார்:

இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இதுகுறித்து போரூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமியை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர்.

விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்:

போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தது. சிறுமியின் நண்பருக்கு உடல்நிலை சரியில்லாததால் அவரைப் பார்ப்பதற்காக குன்றத்தூர் பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு அவரது நண்பர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு அழைத்து செல்வதாக கூறி சிறுமியை ஏற்றிக் கொண்டு சென்றார். ஆனால் அவர் போரூர் அருகே கெருகம்பாக்கம் பகுதியில் உள்ள காலி இடத்திற்கு சிறுமியை அழைத்துச் சென்றார். மேலும் தனது நண்பர்கள் சிலரையும் அவர் அங்கு வரவழைத்தார். பின்னர் அவர்கள் சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து விட்டு தப்பி சென்றிருப்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

6 பேரிடர் போலீசார் தீவிர விசாரணை:

சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தது தொடர்பாக குன்றத்தூர் அடுத்த காலடிபேட்டையைச் சேர்ந்த சிறுமியின் நண்பர் உள்ளிட்ட 6 பேரை போலீசார் பிடித்துள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது. சிறுமி வசிக்கும் பகுதி சென்னை போலீஸ் கமிஷனரக எல்லையிலும், கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவம் நடந்த பகுதி ஆவடி போலீஸ் கமிஷனரக எல்லையிலும், குற்ற சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்கள் தாம்பரம் கமிஷனரக எல்லை பகுதியை சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமியுடன் அவரது மற்றொரு தோழியும் வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அவர் பாதிக்கப்பட்ட சிறுமியுடன் செல்லாமல் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனால் அவர் பாலியல் வன்கொடுமையில் இருந்து தப்பினார். இந்த பாலியல் வன்கொடுமையில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com