கஞ்சா அடித்ததை தட்டிக் கேட்டதால் மாணவன் படுகொலை - தந்தை பரபரப்பு பேட்டி

சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 மாணவர்களை கைது செய்துள்ளனர்.
கஞ்சா அடித்ததை தட்டிக் கேட்டதால் மாணவன் படுகொலை - தந்தை பரபரப்பு பேட்டி
Published on

சென்னை,

கஞ்சா அடித்ததை தட்டிக் கேட்டதால் தனது மகனை கொலை செய்துவிட்டதாக, பிளஸ்-2 மாணவனின் தந்தை தெரிவித்துள்ளார்.

மாணவர் கொலை

சென்னை மாவட்டம் திருவொற்றியூரை சேர்ந்த தனுஷ் (16 வயது) என்ற மாணவர் ஜெயகோபால் கரோடியா அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று 30-க்கும் மேற்பட்ட மாணவர்களால் தனுஷ் அடித்து கொல்லப்பட்டார். இதுதொடர்பாக பெற்றோர் மற்றும் உறவினர்கள் மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

தட்டிக்கேட்ட மாணவன்

மாணவர் கொலை குறித்து அவரது தந்தை கூறியதாவது:-

பள்ளி வளாகத்தில் தனுஷ் மற்றும் அவரது நண்பர் ஜெயகேஷ் சென்று கொண்டிருந்தபோது, பிளஸ்-1 மாணவர்கள் சிலர் கஞ்சா அடித்து, தனுஷின் முகத்தில் ஊதியுள்ளனர். அதனை ஜெயகேஷ் தட்டிகேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் பழிவாங்கும் நோக்கில், அவரை கொலை செய்வதற்காக திட்டம் தீட்டியுள்ளனர்.

இந்த நிலையில் ஜெயகேஷ் நேற்று பள்ளிக்கு வராததால், பள்ளி முடிந்து பேருந்து நிலையம் சென்ற தனுஷை 30-க்கும் மேற்பட்ட மாணவர்கள் வழிமறித்து, வலுகட்டாயமாக ஆள்நடமாட்டம் இல்லாத ஒரு மைதானத்திற்கு இழுத்து சென்று தாக்கியுள்ளனர். இதில் உள்காயங்கள் அடைந்த தனுஷ் மயங்கி விழுந்து உயிரிழந்தார். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

போலீசார் விசாரணை

இந்த சம்பவம் குறித்து அறிந்த திருவொற்றியூர் போலீசார், மாணவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாணவரின் தந்தை அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

3 பேர் கைது

இது தொடர்பாக 3 மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள மாணவர்களை கைது செய்வதற்காக வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் தலைமையில் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். 30 மாணவர்களையும் கைது செய்யும் வரை மறியலில் ஈடுபடுவோம் என பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஆவேசமாக கூறியுள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com