

காஞ்சிபுரம்,
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் அடுத்த நந்தம்பாக்கம், ராஜீவ்காந்தி நகர் முதல் தெருவை சேர்ந்தவர் கண்ணன். தனியார் ஷோரூமில் வேலை செய்து வருகிறார். இவரது மகள் ரேஷ்மா (17 வயது). குன்றத்தூரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்து வந்த ரேஷ்மா, பிளஸ்-2 தேர்வு எழுதி விட்டு தேர்வு முடிவுக்காக காத்திருந்தார்.
பள்ளி விடுமுறை நாளில் கடந்த சில நாட்களாக தாம்பரத்தில் உள்ள தனியார் நீட் பயிற்சி மையத்தில் படித்து வந்தார். நீட் தேர்வில் பாடங்கள் மிகவும் கடினமாக உள்ளதாக தனது தாய் மற்றும் சகோதரிகளிடம் ரேஷ்மா கூறி வந்ததாக தெரிகிறது. நேற்று தனது அறைக்கு சென்ற ரேஷ்மா நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த பெற்றோர் அக்கம், பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.
அப்போது அங்கு ஜன்னல் கம்பியில் தூக்கிட்ட நிலையில் ரேஷ்மா உயிருக்கு போராடி கொண்டிருந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மாணவி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து திருமுடிவாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் விரைந்து சென்ற போலீசார் ரேஷ்மாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிளஸ்-2 தேர்வு எழுதிய மாணவி, விடுமுறையில் நீட் பயிற்சி மையத்திற்கு சென்ற நிலையில் நீட் பாடங்கள் கடினமாக உள்ளதாக கூறி மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.