ராஜா வாய்க்காலில் மூழ்கி கல்லூரி மாணவர் பலி

நண்பர்களுடன் குளிக்க சென்றபோது ஜேடர்பாளையம் படுகை அணை ராஜா வாய்க்காலில் மூழ்கி கல்லூரி மாணவர் பரிதாபமாக இறந்தார்.
ராஜா வாய்க்காலில் மூழ்கி கல்லூரி மாணவர் பலி
Published on

பரமத்திவேலூர்

கல்லூரி மாணவர்

தேனி மாவட்டம் சின்னமனூர் பகுதியை சேர்ந்தவர் சவுந்தரபாண்டியன். இவர் தேயிலை தோட்ட தொழிலாளி. இவரது மகன் சிரஞ்சீவி (வயது 20). இவர் பரமத்தி அருகே மேல்சாத்தம்பூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் 2-ம் ஆண்டு படித்து வந்தார். ஜேடர்பாளையம் அருகே அரசம்பாளையத்தில் உள்ள அவருடன் படித்து வரும் சக கல்லூரி மாணவர் வாசுதேவன் என்பவரது வீட்டில் கடந்த 6 மாதமாக சிரஞ்சீவி தங்கி கல்லூரிக்கு சென்று வந்துள்ளார்.

இந்தநிலையில் சிரஞ்சீவி நேற்று மாலை தனது நண்பர்களுடன் ஜேடர்பாளையம் படுகை அணை பகுதியில் உள்ள ராஜாவாய்க்காலில் குளிப்பதற்காக சென்றார். சிரஞ்சீவி தனது நண்பர்களுடன் குளித்து கொண்டிருந்தார். அப்போது ஆழமான பகுதிக்கு சீரஞ்சீவி சென்று குளித்ததாக கூறப்படுகிறது. பின்னர் நீச்சல் தெரியாததால் அவர் தண்ணீரில் மூழ்கி உயிருக்கு போராடியுள்ளார்.

உடல் மீட்பு

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் அவரை காப்பாற்ற முயன்றுள்ளனர். மேலும் இதுகுறித்து ஜேடர்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மீனவர்கள் உதவியுடன் ராஜாவாய்க்காலில் மூழ்கிய மாணவர் சிரஞ்சீவியை தேடினர்.

நீண்ட நேர தேடுதலுக்கு பிறகு தண்ணீரில் மூழ்கி இறந்த மாணவர் உடலை மீட்டனர். இதையடுத்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து ஜேடர்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com