தந்தை இறந்த துக்கத்திலும் பிளஸ்-2 தேர்வு எழுதி 582 மதிப்பெண்கள் வாங்கிய மாணவர் - குவியும் பாராட்டுகள்

பிளஸ் 2 தமிழ் தேர்வு அன்று மாணவரின் தந்தை மாரடைப்பால் உயிரிழந்தார்.
தந்தை இறந்த துக்கத்திலும் பிளஸ்-2 தேர்வு எழுதி 582 மதிப்பெண்கள் வாங்கிய மாணவர் - குவியும் பாராட்டுகள்
Published on

சிவகங்கை,

சிவகங்கையை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மகன் ஹர்ஷித் ராஜலிங்கம். இவர் சிவகங்கை சாம்பவிகா மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

பிளஸ்-2 தமிழ் தேர்வு தொடங்கியபோது ஹர்ஷித் ராஜலிங்கம் தனது தந்தை செந்தில்குமாரிடம் ஆசீர்வாதம் வாங்கிவிட்டு தேர்வெழுத சென்றார். ஆனால் அவர் தேர்வு எழுதிக்கொண்டிருந்தபோது செந்தில்குமார் திடீரென மாரடைப்பால் உயிரிழந்தார்.

தேர்வு எழுதி வந்ததும் தந்தையின் இறப்பு செய்தியை கேட்ட மாணவர் கதறி அழுதார். தந்தையின் ஆசையை நிறைவேற்றுவதற்காக தொடர்ந்து நடந்த தேர்வுகளில் அதிக கவனம் செலுத்தி படித்து வந்தார். இந்த நிலையில் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் நேற்று வெளியான நிலையில் மாணவர் ஹர்ஷித் ராஜலிங்கம் 600-க்கு 582 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் 2-வது இடம் பிடித்தார்.

தந்தை இறந்த துக்கத்திலும் தேர்வு எழுதி அதிக‌ மதிப்பெண்கள் எடுத்த மாணவர் ஹர்ஷித் ராஜலிங்கத்துக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இதுகுறித்து மாணவர் ஹர்ஷித் ராஜலிங்கம் கூறுகையில், கணினி சாப்ட்வேர் துறையில் பெரிய அளவில் சாதிக்க வேண்டும் என்பதே என் தந்தையின் ஆசை. அந்த ஆசையை நிறைவேற்ற நான் தொடர்ந்து முயற்சி செய்வேன் என்றார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com