கழிவறைக்கு சென்ற மாணவிக்கு பாலியல் தொல்லை – பெற்றோர் சாலை மறியல்

பாதிக்கப்பட்ட மாணவியிடம் சுமார் 3 மணி நேரம் போலீசார் தீவிரமாக விசாரணை செய்தனர்.
மாணவிக்கு பாலியல் தொல்லை
ஆசிரியர் கைது
Published on: 

சென்னை,

கழிவறைக்கு சென்ற மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக புகார் எழுந்த நிலையில் போலீசார் அளித்த விளக்கத்தை ஏற்க மறுத்து பெற்றோர் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

பாலியல் தொல்லை

சென்னை அடுத்த வண்டலூர் கேளம்பாக்கம் பிரதான சாலை, கண்டிகை பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் படிக்கும் மாணவி ஒருவர் நேற்று பள்ளி கழிவறைக்கு சென்றபோது திடீரென மயங்கி விழுந்துள்ளார்.

மாணவி மயங்கி கிடந்ததை பார்த்த சக மாணவிகள் பள்ளி ஊழியர்களிடம் தகவல் தெரிவித்து, அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து மாணவியின் பெற்றோர் விசாரித்தபோது, பள்ளி வளாகத்துக்குள் நுழைந்த மர்ம கும்பல், மாணவியின் முகத்தில் கைக்குட்டையை வைத்து மூடி பாலியல் தொல்லை அளித்ததாக அவர் தெரிவித்தார்.

விசாரணை

இது குறித்து மாணவியின் பெற்றோர் தாழம்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாணவியிடம் சுமார் 3 மணி நேரம் விசாரணை நடத்தினர்.

இதற்கிடையே, போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், தேர்வு நடைபெற உள்ளதால் ஏற்பட்ட பதற்றம் காரணமாக மாணவி மயங்கி விழுந்திருக்கலாம் என தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், மாணவிக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டதற்கான ஆதாரம் இதுவரை கிடைக்கவில்லை என்றும் போலீசார் தரப்பில் தெரிவித்தனர்.

சாலை மறியல்

ஆனால், போலீசாரின் இந்த விளக்கத்தை மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஏற்க மறுத்துள்ளனர். இதையடுத்து பள்ளி மாணவர்கள், பெற்றோர் மற்றும் உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, வண்டலூர் - கேளம்பாக்கம் பிரதான சாலையில் 100-க்கும் மேற்பட்ட பெற்றோர் மற்றும் உறவினர்கள் இன்று சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். பாலியல் தொல்லை அளித்து தப்பி ஓடிய மர்ம நபர்களை கைது செய்யும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என மாணவியின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com