தந்தையின் இறுதிச்சடங்கிற்குக்கூட பணமின்றி தவித்த மாணவன்; கைகொடுத்த கிராம மக்கள்

தாய் ஏற்கனவே மறைந்த நிலையில், தற்போது தந்தையையும் இழந்ததால் 15 வயதான சிறுவன் மோகன்ராஜ் ஆதரவற்ற நிலைக்குத் தள்ளப்பட்டான்.
தந்தையின் இறுதிச்சடங்கிற்குக்கூட பணமின்றி தவித்த மாணவன்; கைகொடுத்த கிராம மக்கள்
இறுதிச்சடங்கு
Published on: 

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே பெற்றோர் இருவரையும் இழந்து, இறுதிச்சடங்கு கூட செய்ய பணமின்றி தவித்த 15 வயது பள்ளி மாணவனின் வாழ்வாதாரத்திற்கும், உயர் கல்விக்கும் தமிழக அரசு உதவ வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தாய் உயிரிழந்தார்

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள எஸ்.குளத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நடராஜன் (வயது 48). இவரது மனைவி முனியம்மாள். இந்த தம்பதியினருக்கு மோகன்ராஜ் என்ற மகன் உள்ளார். கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக் குறைவால் முனியம்மாள் உயிரிழந்தார்.

தந்தை உயிரிழந்தார்

மனைவியின் மறைவுக்கு பிறகு, நடராஜன் வேறு திருமணம் செய்து கொள்ளாமல் தனது ஒரே மகனான மோகன்ராஜை வளர்த்து ஆளாக்கி வந்தார். இந்த நிலையில், கடந்த சில தினங்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நடராஜனும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

கிராம மக்கள் கண்ணீர் அஞ்சலி

தாய் ஏற்கனவே மறைந்த நிலையில், தற்போது தந்தையையும் இழந்ததால் 15 வயதான சிறுவன் மோகன்ராஜ் ஆதரவற்ற நிலைக்குத் தள்ளப்பட்டான். தந்தையின் உடலுக்கு இறுதிச் சடங்குகளை நடத்துவதற்கு கூட அவரிடம் போதிய பணம் இல்லை. என்ன செய்வது என்று தெரியாமல் தவித்த சிறுவனின் பரிதாப நிலையை கண்டு கிராம மக்கள் கண்ணீர் விட்டனர்.

கிராம மக்கள்

இதையடுத்து, கிராம மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து தங்களுக்குள் பணம் திரட்டி, நடராஜனின் இறுதிச் சடங்குகளை முறைப்படி நடத்தி உடலை அடக்கம் செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. மோகன்ராஜ் தற்போது 11-ம் வகுப்பு படித்து வருகிறான்.

சிறுவன் உருக்கமான கோரிக்கை

இதுதொடர்பாக சிறுவன் மோகன்ராஜ் கூறும்போது, "எனக்கு உறவினர்கள் என்று யாரும் ஆதரவாக இல்லை. தந்தை மறைவுக்கு பிறகு உணவு, கல்வி உள்ளிட்ட அடிப்படை தேவைகளுக்கே தினசரி சிரமப்பட்டு வருகிறேன். நான் தொடர்ந்து படிக்கவும், எனது எதிர்கால வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் தமிழக அரசும், கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகமும் உரிய உதவிகளை வழங்க வேண்டும்" என உருக்கமுடன் கோரிக்கை விடுத்துள்ளார்.

கிராம மக்கள் கோரிக்கை

தாய், தந்தையை இழந்து தவிக்கும் இந்த மாணவனுக்கு அரசு காப்பக வசதி, மாதாந்திர உதவித்தொகை மற்றும் உயர் கல்விக்கான முழு உதவிகள் கிடைக்க மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்களும் வலியுறுத்தியுள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com