மாணவி தற்கொலை விவகாரம்: பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம்

மாணவி தற்கொலை விவகாரம் தொடர்பாக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் சென்னையில் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
மாணவி தற்கொலை விவகாரம்: பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம்
Published on

சென்னை,

அரியலூர் மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று நடந்த போராட்டத்தில், கட்சியின் பொதுச் செயலாளர் கரு.நாகராஜன், மூத்த தலைவர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, சி.பி.ராதாகிருஷ்ணன் மற்றும் கட்சியின் முக்கிய பொறுப்பாளர்கள், நடிகர் செந்தில் மற்றும் கட்சியின் தொண்டர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இந்தப் போராட்டத்தில், 'தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், தமிழக அரசு எந்தவித பாரபட்சமுமின்றி உரிய நடவடிக்கையை விரைவாக எடுக்க வேண்டும்', 'தவறும் பட்சத்தில் போராட்டம் தொடர்ந்து நடத்தப்படும்' என கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியதாவது:-

"தற்கொலை செய்துகொண்ட பள்ளி மாணவியின் பெற்றோர் மற்றும் அந்த குழந்தையின் வீடியோவை ஆதாரமாக எடுத்துக் கொண்டால், மிகத் தெளிவாகத் தெரியும், குழந்தைக்கு அந்தப் பள்ளியில் கொடுத்த டார்ச்சருக்குக் காரணமே, தான் பிறந்த மதத்திலிருந்து மாறமாட்டேன் என சொல்லியதால், அதற்கு கட்டாயப்படுத்தியதுதான் காரணம் என்பது தெரியவருகிறது. எனவேதான் சிபிஐ போன்ற சுதந்திரமான அமைப்பு இதுதொடர்பாக விசாரணை நடத்த வேண்டும். முழு உண்மையும் வெளியே வர வேண்டும்.

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கூறுவதையோ, நான் கூறுவதையோ எடுத்துக்கொள்ள வேண்டாம். இந்த விவகாரத்தை சுதந்திரமான விசாரணை அமைப்பிடம் கொடுத்து அவர்கள் உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டும். கட்டாய மதமாற்ற தடைச் சட்டம் கொண்டு வரவேண்டும் என்பது தமிழகத்தில் உள்ள மக்களின் விருப்பமாக உள்ளது. இந்தியாவில் மூன்று, நான்கு மாநிலங்களில் இந்த சட்டம் தற்போது நடைமுறையில் உள்ளது. தமிழகத்தில் நடைபெறும் ஒவ்வொரு முறையும் நிகழும் இதுபோன்ற சம்பவங்கள் இந்தச் சட்டத்தைக் கொண்டுவர கட்டாயப்படுத்துகின்றன. இனிவரும் காலத்தில் இந்தச் சட்டம் கட்டாயம் கொண்டு வரவேண்டும், வரும் என்பது எங்களது எதிர்பார்ப்பு.

தமிழக காவல்துறையின் மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. ஆனால், காவல்துறையின் கட்டுப்பாடு அரசியல்வாதிகளிடம் சென்றுவிட்டது அதனால்தான் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. ஒவ்வொரு காவல் நிலையத்தையும் பாருங்கள், கொலைக்குற்றங்கள் அதிகமாகிவிட்டது. தமிழக காவல்துறை அதிகாரிகள் மீது நம்பிக்கை இல்லாமல் இல்லை, ஆனால் இவர்கள் அந்த அதிகாரிகளை சரியாக வேலை செய்யவிடமாட்டார்கள் என்பதால்தான் நாங்கள் சிபிஐ விசாரணை வேண்டும் என கேட்கிறோம்".

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com