குடல்வால் பாதிப்பிலும் குன்றாத விடா முயற்சி: ஆம்புலன்சில் சென்று தேர்வு எழுதிய மாணவர்

சென்னையில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட மாணவர் ஆம்புலன்ஸ் வாகனத்தில் சென்று தேர்வு எழுதியது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
குடல்வால் பாதிப்பிலும் குன்றாத விடா முயற்சி: ஆம்புலன்சில் சென்று தேர்வு எழுதிய மாணவர்
Published on

சென்னை,

சென்னை ஈக்காட்டு தாங்கலில் உள்ள இசிஐ பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வரும் மாணவர் ரிஷிகேஷ், அசோக் நகரில் உள்ள லிட்டில் பிளவர் பள்ளியில் பொதுத்தேர்வு எழுதி வந்தார்.

கடந்த 11-ம் தேதி தமிழ் தேர்விற்கு சென்றிருந்த மாணவருக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டு பெரும் அவதி அடைந்து உள்ளார். அந்த தேர்வு முடித்துவிட்டு வீட்டுக்கு வந்த மாணவர் உடனடியாக கிண்டியில் உள்ள அரசு உயர் சிறப்பு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் மாணவனுக்கு குடல்வால் அழற்சி பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து கடந்த 12-ம் தேதி மாணவருக்கு அப்பண்டிக்ஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதன்பிறகு தற்போதும் மருத்துவ சிகிச்சையில் இருந்து வருகிறார்.

இந்தநிலையில் ஆங்கில தேர்வு இன்று நடைபெற்றது. அறுவை சிகிச்சை செய்யப்பட்ட மாணவர் மருத்துவ கண்காணிப்பிலேயே இருந்து வருவதால் அவர் இன்று தேர்வு எழுதுவது சிக்கலாக மாறியது.

மருத்துவமனையில் இருந்து தேர்வு மையத்திற்கு சென்று தேர்வு எழுதிவிட்டு மீண்டும் மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெறுவது என பெற்றோர் முடிவு செய்தனர்.

அதன்படி கிண்டியில் உள்ள அரசு உயர் சிறப்பு பொது மருத்துவமனையில் இருந்து இன்று காலை ஆம்புலன்சில் புறப்பட்டு தேர்வு மையத்திற்கு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. காலை 9.30 மணியளவில் மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்சில் புறப்பட்டார்.

10 நிமிடங்களில் ஆம்புலன்ஸ் தேர்வு மையம் சேர்ந்தது. அங்கு அவருக்கு தேர்வு எழுத சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மாணவருக்கு உதவுவதற்காக அரசு தேர்வுகள் துறை சார்பில் சொல்வதை எழுதுவோர் நியமிக்கப்பட்டனர். ஆசிரியரின் கேள்விகளுக்கு மாணவர் சொல்லிய பதிலை விடையாக ஆசிரியர் எழுதினார்.

3 மணி நேரம் தேர்வு நடைபெற்று முடிந்தது. அதன்பின்னர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சென்னையில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட மாணவர் ஆம்புலன்ஸ் வாகனத்தில் சென்று தேர்வு எழுதியது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com