

திருநெல்வேலியில் அமைந்துள்ள புஷ்பலதா வித்யா மந்திர் பள்ளியில் 11-ம் வகுப்பு பயிலும் மாணவி மு.சூடாமணி, இளம் எழுத்தாளர், கவிஞர் மற்றும் சொற்பொழிவாளராக திகழ்கிறார். கடந்த 8 ஆண்டுகளாக எழுத்து, பேச்சு, ஓவியம் போன்ற தன்னுடைய பல்துறை திறமைகளின் மூலம் சமூகத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.
குறிப்பாக தமிழ் வளர்ச்சி, மூடநம்பிக்கைகளை ஒழித்தல் மற்றும் பெண்களின் முன்னேற்றம் குறித்தும் தொடர்ந்து பேசி, எழுதி செயல்பட்டு வருவதுடன், இந்த சிறு வயதிலேயே இதுவரை 6 புத்தகங்களையும் எழுதி வெளியிட்டுள்ளார். இவரது சிறப்பான தொடர் சமூகப் பணியை பாராட்டி, தமிழக அரசு 2025-ம் ஆண்டிற்கான ‘தமிழ்நாட்டின் சிறந்த பெண் குழந்தை’ என்ற விருதை வழங்கி கௌரவித்துள்ளது. இந்த விருது கடந்த 16-ம் தேதி சென்னையில் நடைபெற்ற விழாவில் சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் அவர்களால் இவருக்கு வழங்கப்பட்டது.
இந்த நிலையில் விருது பெற்ற மாணவி சூடாமணியை திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. பிரசண்ணகுமார் நேரில் அழைத்து பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்தார். அவருடைய உயர்கல்வி குறித்த திட்டங்கள் பற்றியும் விசாரித்து வழிகாட்டல் வழங்கினார்.
மேலும் இளம் வயதிலேயே சமூகப் பொறுப்புணர்வுடன் செயல்பட்டு வருவது பாராட்டத்தக்கது என்றும், அவரது சாதனை மற்ற மாணவர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக இருக்கும் என்றும் எஸ்.பி. தெரிவித்தார். இந்த நிகழ்வில் சமூக ஊடகப் பிரிவு அலுவலர் வெங்கட்ராமன் மற்றும் மாணவியின் தாயார் உடனிருந்தனர்.