

சென்னை,
தமிழகத்தில் பஸ் கட்டணத்தை அரசு அதிரடியாக உயர்த்தி இருக்கிறது.
அரசு போக்குவரத்து கழக பஸ்களை பொதுமக்கள் பெரும் அளவில் பயன்படுத்தி வருகிறார் கள். இந்த கட்டண உயர்வு அவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கட்டண உயர்வுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். இதுதொடர்பாக தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள் சார்பில் போராட்டங்கள் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
இந்தநிலையில் விழுப்புரம், சேலம், தஞ்சை, பாளையங்கோட்டை உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பஸ் கட்டண உயர்வை கண்டித்து மாணவ-மாணவிகள் போராட்டத்தில் குதித்து உள்ளனர். நேற்று அவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தநிலையில், ஐகோர்ட்டு மூத்த நீதிபதி ஆர்.சுப்பையா, நீதிபதி டி.ரவீந்திரன் ஆகியோர் நேற்று வழக்குகளை விசாரிக்க தொடங்கினார்கள். அப்போது வக்கீல் ஒருவர் ஆஜராகி, தமிழக அரசு திடீரென பஸ் கட்டணத்தை உயர்த்தி உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவை சட்ட விதிகளின் அடிப்படையில் முறையாக பிறப்பிக்கப் படவில்லை.
இதுதொடர்பாக வழக்கு தொடர உள்ளேன். இந்த வழக்கை அவசர வழக்காக உடனே விசாரணைக்கு ஏற்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். உடனே வழக்கை விசாரணைக்கு ஏற்கவேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர். வழக்கை தாக்கல் செய்தால் பிற வழக்குகளுடன் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று கூறினர்.
இதையடுத்து வக்கீல் ஆர்.சித்ரவேலு, வி.முனி கிருஷ்ணன் ஆகியோர் தனித்தனியாக தாக்கல் செய்துள்ள மனுக்களில் கூறியிருப்பதாவது:-
தமிழக அரசு பல்வேறு காரணங்களைக் கூறி அரசு பஸ் கட்டணத்தை கடந்த 20-ந் தேதி முதல் திடீரென உயர்த்தியுள்ளது. இந்த திடீர் பஸ் கட்டண உயர்வால், அரசு பஸ்களை மட்டுமே நம்பியுள்ள 80 சதவீதம் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஏனெனில், இதுநாள் வரை மற்ற போக்குவரத்தைக் காட்டிலும் பஸ் கட்டணம் மட்டும்தான் குறைவாக இருந்தது. ஆனால் இப்போது பஸ் கட்டணம் தான் மற்ற போக்குவரத்தைக்காட்டிலும் அதிகமாக உள்ளது.
மேலும், கட்டண உயர்வுக்கு அரசு தற்போது கூறும் பல்வேறு காரணங்கள் ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை. ஒரேநாள் இரவில் திடீரென எவ்வித முன்னறிவிப்புமின்றி முடிவு செய்து, மறுநாள் காலையில் அதிக பஸ் கட்டணம் வசூலிக்கப்பட்டதால் பயணிகள் சொல்ல முடியாத துயரங்களை சந்தித்தனர்.
இதனால் அரசு பஸ்களில் பயணம் செய்வோர் தங்களின் மாதாந்திர சம்பளத்தில் பெரும் தொகையை பஸ் கட்டணத்திற்கு செலவிட நேரிடுகிறது.
ஏற்கனவே பணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி. மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வு போன்றவற்றால் கடும் இன்னலுக்கு ஆளாகிவரும் பொதுமக்கள், தற்போது இந்த பஸ் கட்டண உயர்வால் மேலும் அவதியடைந்து வருகின்றனர். எனவே இந்த திடீர் பஸ் கட்டண உயர்வுக்கு இடைக்காலத் தடை விதிக்கவேண்டும். பஸ் கட்டணத்தை உயர்த்தி தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யவேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.