‘ஏன் பள்ளிக்கு வரவில்லை?’ என கேட்ட தலைமை ஆசிரியர் மீது மாணவர்கள் தாக்குதல்

காயமடைந்த தலைமை ஆசிரியரை மீட்டு கல்லம்பாளையம் மாநகராட்சி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.
ஆசிரியர் மீது மாணவர்கள் தாக்குதல்
Published on

திருப்பூர்,

திருப்பூர் நஞ்சப்பா மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியரை, பிளஸ்-2 மாணவர்கள் 7 பேர் அறைக்குள் புகுந்து சரமாரியாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

தலைமை ஆசிரியர்

பள்ளியின் தலைமை ஆசிரியர் கர்னல் (வயது 54), நேற்று தனது அறையில் அமர்ந்து, பள்ளிக்கு தொடர்ந்து வராமல் நேரடியாக தேர்வுக்கு வந்த மாணவர்களிடம் விசாரித்துக்கொண்டிருந்தார். அப்போது திடீரென அறைக்குள் புகுந்த பிளஸ்-2 மாணவர்கள் 7 பேர், அவரை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.

சத்தம் கேட்டு அருகில் இருந்த வகுப்பறையில் இருந்து ஆசிரியர் ஒருவர் ஓடி வந்தார். இதையடுத்து மாணவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

சிகிச்சை

தாக்குதலில் காயமடைந்த தலைமை ஆசிரியரை மீட்டு கல்லம்பாளையம் மாநகராட்சி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. முகத்தில் ஏற்பட்ட காயத்தில் இருந்து ரத்தம் வழிந்ததால், அவரது சட்டையும் ரத்தக்கறை படிந்தது.

மாலை வரை மருத்துவமனையில் இருந்த தலைமை ஆசிரியர், சிகிச்சை முடிந்ததும் மீண்டும் பள்ளிக்கு வந்தார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதற்கிடையே, சக ஆசிரியர் அளித்த தகவலின்பேரில் பள்ளிக்கு வந்த போலீசார், பிளஸ்-2 மாணவர்கள் சிலரை தலைமை ஆசிரியர் அறைக்கு அழைத்து வந்து தனித்தனியாக விசாரணை நடத்தினர். மேலும், பள்ளியில் பதிவான கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

இதுகுறித்து முதன்மை கல்வி அலுவலர் புனிதா அந்தோணியம்மாள் கூறுகையில், "தலைமை ஆசிரியர் மீது மாணவர்கள் தாக்குதல் நடத்தியது மோசமான நடத்தை. இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்துக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர். தவறு செய்த மாணவர்கள் மீது தயக்கமின்றி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com