

திருவாரூர்:
திருவாரூர் மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருவாரூர் வாசன் நகரில் மாவட்ட அரசு இசைப்பள்ளி உள்ளது. தமிழக அரசின் கலைப்பண்பாட்டு துறையின் கீழ் இயங்கி வரும் இந்த இசைப்பள்ளியில் குரலிசை, நாதஸ்வரம், தவில், தேவாரம், பரதநாட்டியம், வயலின் மற்றும் மிருதங்கம் ஆகியவற்றுக்கு 3 ஆண்டு முழு நேர பயிற்சி அளிக்கப்பட்டு சான்றிதழ் வழங்கப்படும்.
இப்பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு அரசுவிதிகளின்படி இலவச விடுதி, கல்வி உதவித்தொகை, இலவச பஸ் கட்டண சலுகைகள் மற்றும் மாதந்தோறும் கல்வி ஊக்கத்தொகையாக ரூ.400 வழங்கப்படும். இப்பள்ளியில் சேருவதற்கு 12 முதல் 25 வயதிற்குட்பட்டவராக இருக்க வேண்டும். குரலிசை, பரதநாட்டியம், வயலின், மிருதங்கம், தவில், தேவாரம் ஆகிய கலைகளுக்கு தமிழ் எழுத படிக்க தெரிந்தால் போதுமானது. இந்த ஆண்டு கல்வி கட்டணம் ரூ.350 மட்டும் செலுத்தவேண்டும். ஆண், பெண் இருபாலரும் சேரலாம். மேலும் விவரங்களுக்கு திருவாரூர் மாவட்ட அரசு இசைப்பள்ளி தலைமை ஆசிரியரை அணுகி தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.