திருக்குறள் ஒப்பிக்கும் போட்டியில் மாணவ-மாணவிகள் பங்கேற்கலாம்

திருக்குறள் ஒப்பிக்கும் போட்டியில் மாணவ-மாணவிகள் பங்கேற்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருக்குறள் ஒப்பிக்கும் போட்டியில் மாணவ-மாணவிகள் பங்கேற்கலாம்
Published on

1,330 குறட்பாக்களையும் ஒப்பித்தல்

உலக பொதுமறையாம் திருக்குறளில் உள்ள கருத்துக்களை பள்ளி மாணவ-மாணவிகள் இளம் வயதிலேயே அறிந்து கொண்டு, கல்வி அறிவோடு நல்லொழுக்கம் மிக்கவர்களாக விளங்கும் வகையில் தமிழக அரசால் 'திருக்குறள் முற்றோதல் பாராட்டுப் பரிசு' திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இதில் 1,330 குறட்பாக்களையும் மனனம் (மனப்பாடம்) செய்து ஒப்பிக்கும் மாணவ-மாணவிகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் ரொக்கப்பரிசாக தமிழ் வளர்ச்சித்துறையால் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.இதன்படி 2022-23-ம் ஆண்டில் இத்திட்டத்தின் கீழ் போட்டியில் பங்கேற்கும் மாணவ-மாணவிகள் 1,330 குறட்பாக்களையும் ஒப்பிக்கும் திறன் கொண்டவர்களாக இருக்க வேண்டும். இயல் எண், அதிகாரம் எண், குறள் எண் போன்றவற்றை தெரிவித்தால், அதற்கான திருக்குறளை சொல்லும் திறன் பெற்றவராக இருக்க வேண்டும். திருக்குறளின் அடைமொழிகள், சிறப்புகள், சிறப்பு பெயர்கள் போன்றவற்றையும் அறிந்திருக்க வேண்டும். திருக்குறளின் பொருளை அறிந்திருந்தால் கூடுதல் தகுதியாக கருதப்படும்.

பங்கேற்கலாம்

பெரம்பலூர் மாவட்டத்தில் 1,330 குறட்பாக்களையும் மனப்பாடம் செய்து ஒப்பிக்கும் திறன் பெற்ற மாணவ-மாணவிகள் இருப்பின் இப்போட்டியில் பங்கேற்கலாம். ஏற்கனவே இந்த போட்டியில் பரிசு பெற்றவர்கள் மீண்டும் இந்த போட்டியில் கலந்து கொள்ளக்கூடாது. போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் மாணவ-மாணவிகள் அடுத்த மாதம் (டிசம்பர்) 28-ந் தேதி மாலைக்குள் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் அலுவலகத்தில் விண்ணப்பம் பெறலாம். அல்லது https://tamilvalarchithurai.tn.gov.in என்ற தமிழ் வளர்ச்சித்துறையின் வலைதளத்தில் விண்ணப்பத்தை இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதுகுறித்த மேலும் விவரங்களுக்கு 04328-225988 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com