

கன்னியாகுமரி,
தக்கலை அருகே அரசு பள்ளியில், மாணவிகள் மது அருந்திய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், பள்ளி தலைமை ஆசிரியைபணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளி, நீட் தேர்வு, கியூட் தேர்வு, ஜே.இ.இ உள்ளிட்ட தேர்வுகளுக்கான சிறப்பு பயிற்சி மையமாக செயல்பட்டு வருகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் 1-ஆம் தேதி, இந்த தேர்வுகளுக்கான சிறப்பு பயிற்சி வகுப்புகள், இந்த பள்ளியில் நடைபெற்றது.
இந்த பயிற்சி வகுப்பிற்கு மாணவ, மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பயிற்சி வகுப்பு முடிந்த பின்னர் ஒரு சில மாணவிகள் குழுவாக இணைந்து வகுப்பறையில் அமர்ந்து மது அருந்தி உள்ளனர். வெளியில் இருந்து உணவுகளையும் பார்சல் வாங்கி வந்து சாப்பிட்டு உள்ளனர்.
இதனை அவர்களுடன் வந்த சக மாணவி ஒருவர் தனது செல்போனில் வீடியோவாக எடுத்து உள்ளார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட கலெக்டர் பிரதாப் உடனடியாக விசாரணை நடத்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கும், மாவட்ட காவல்துறைக்கும் உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து முதன்மை கல்வி அலுவலர் பிரின்ஸ் ஆரோக்கியராஜ் விசாரணை நடத்தினார். காவல்துறையும் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அந்த வீடியோவில், மதுபான பாட்டில்களை அவர்களது ஆண் நண்பர் ஒருவர் டாஸ்மாக் கடையில் இருந்து வாங்கி வந்து கொடுத்ததாக மாணவிகள் பேசும் உரையாடலும் பதிவாகியுள்ளது.
மேலும் இது குறித்து அதிகாரிகள், தக்கலை அரசு மேல்நிலைப் பள்ளிக்கு நேரில் சென்று சம்பந்தப்பட்ட மாணவிகள் மற்றும் ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி மாணவிகளுக்கு மது பாட்டில் வாங்கி கொடுத்த நபர் யார் என்றும், இந்த சம்பவத்தில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதனிடையே தக்கலை அரசு மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியராக இருந்த பிரமிளா இவாஞ்சலின், நாகர்கோவில் வடசேரி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு பணி இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார். அதேபோல் வடசேரி பள்ளி தலைமை ஆசிரியர் ஸ்டாலின், தக்கலை அரசு பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டு முதன்மை கல்வி அலுவலர் பிரின்ஸ் ஆரோக்கியராஜ் உத்தரவிட்டுள்ளார்.
அரசு பள்ளி மாணவிகள் மது அருந்திய சம்பவம் கல்வித்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. பள்ளி, கல்லூரிகளில் குற்றச் சம்பவங்கள் நடைபெறாத வகையில், கல்வித் துறை அதிகாரிகள் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும், மாணவ மாணவிகளுக்கு கவுன்சிலிங் நடத்தப்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.