

அம்பை:
நெல்லை மேலத்திடியூர் பி.எஸ்.என். பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் முதலாம் ஆண்டு பொறியியல் பயிலும் அனைத்து துறை மாணவர்களும், கட்டிட அமைப்பு பொறியியல் துறை மாணவர்களும் செயல் இயக்குனர் செல்வகுமார், கல்லூரி முதல்வர் மணிகண்டன் வழிகாட்டுதலின்படி, கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள கரம்பை வேளாண்மை பண்ணைக்கு களப்பயணம் சென்றனர். விவசாயி விஸ்வநாதன் மாணவ-மாணவிகளுக்கு இயற்கை விவசாயம் பற்றி எடுத்துரைத்தார்.
வேளாண்மை துணை இயக்குனர் செல்வி தமிழக அரசின் வேளாண் திட்டங்கள் குறித்து விளக்கி கூறினார். மேலும் மாணவர்களின் செல்போனில் உழவன் செயலியை பதிவிறக்கம் செய்து, அதன் முக்கியத்துவம் குறித்து கூறினார். சேரன்மாதேவி வேளாண்மை உதவி இயக்குனர் உமாமகேஸ்வரி விவசாயத்தில் நன்மை செய்யும் பூச்சிகளின் பங்கு பற்றியும், அங்ககப் பொருட்கள் தயாரிப்பு பற்றியும் எடுத்துரைத்தார். இயற்கை விவசாயத்தை பாதுகாப்போம் மாசற்ற சுற்றுச்சூழலை உருவாக்குவோம் என்று மாணவர்கள் உறுதிமொழி ஏற்றனர். மாணவ-மாணவிகள் அங்கக வேளாண்மை பற்றி கவிதைகள் எழுதி வாசித்தனர். சிறந்த படைப்பாளிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை பேராசிரியர் பிச்சாண்டி, அமைப்பு பொறியியல் துறை தலைவர் மணிபாரதி ஆகியோர் செய்து இருந்தனர்.