நீட் தேர்வுக்கு மாணவர்கள் தயாராக வேண்டிய சூழ்நிலை இருக்கிறது அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

நீட் தேர்வுக்கு மாணவர்கள் தயாராக வேண்டிய சூழ்நிலை இருக்கிறது என்றும் இந்த நிமிடம் வரை நீட் தேர்வு நடைமுறையில்தான் உள்ளது என்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வுக்கு மாணவர்கள் தயாராக வேண்டிய சூழ்நிலை இருக்கிறது அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
Published on

சென்னை,

சென்னை தலைமைச்செயலகத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

எதிர்கட்சி துணை தலைவர் ஓ.பன்னீர்செல்வம் சமீபத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அந்த அறிக்கையில், அவர் மாணவர்களுக்காக கவலைப்பட்டு பேசுகிறாரா? அல்லது ஏதோ அரசியல் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு அறிக்கையை விட்டிருக்கிறாரா? என்பது தெரியவில்லை.

அரசு பள்ளிகளில் நீட் தேர்வு பயிற்சி அளிக்கப்பட்டு வருவதால் மாணவர்கள் மத்தியில் பெரிய அளவில் குழப்பம் ஏற்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். அரசு பள்ளிகளில் நீட் பயிற்சி தொடங்கியது மே 7-ந்தேதிக்கு (தி.மு.க. ஆட்சி அமைந்த) பிறகு அல்ல. நீட் நுழைவு தேர்வு வந்ததே ஓ.பன்னீர்செல்வம் துணை முதல்-அமைச்சராக இருந்த போதுதான்.

அ.தி.மு.க ஆட்சியின்போது கல்வி அமைச்சராக இருந்த செங்கோட்டையன் தான் அரசு பள்ளிகளில் நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்பு தொடங்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டு, தற்போது வரை செயல்பட்டு கொண்டிருக்கிறது.

எனவே குழப்பம் கொள்ள வேண்டிய அவசியமே இல்லை. அ.தி.மு.க ஆட்சியில் தான் நீட் தேர்வு வந்தது. அதற்கான பயிற்சி வகுப்பும் அரசு பள்ளிகளில் அ.தி.மு.க. ஆட்சியில் தான் தொடங்கப்பட்டது. தற்போது தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு நீட் தேர்வுக்கு எதிரான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதற்காக நீதிபதி. ஏ.கே.ராஜன் தலைமையில் குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் தமிழக முதல்-அமைச்சர் பிரதமரை சந்தித்து நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் விடுத்துள்ளார். கடந்த 2010-ம் ஆண்டு டிசம்பர் 27-ந்தேதிதான் மத்திய அரசு மருத்துவம் மற்றும் அதற்கான மேற்படிப்பில் நுழைவுத்தேர்வை அறிமுகப்படுத்தி அறிக்கை ஒன்றை சமர்ப்பித்தது.

2011-ம் ஆண்டு ஜனவரி 3-ந்தேதி மருத்துவ படிப்பில் சேருவதற்கு தேசிய அளவிலான தகுதி மற்றும் நுழைவுத் தேர்வினை பரீசிலிக்குமாறு மத்திய அரசு தமிழகத்தை கேட்டுக்கொண்டது. அதன்பிறகு ஜனவரி 6-ந்தேதி கருணாநிதியால் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு, நுழைவு தேர்வுக்கு தடை ஆணையும் பெறப்பட்டது.

2017-ம் ஆண்டு ஆட்சியில் இருந்த அ.தி.மு.க.வை பொறுத்தவரை மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் ஆகிய படிப்புகளில் நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்ற 2 தீர்மானங்கள் சட்டமன்றத்தில் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானங்கள் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் அவர் தீர்மானத்துக்கு ஒப்புதல் அளிக்காமல் நிறுத்தி வைத்தார். அவருக்கு அப்போது ஆட்சியில் இருந்த அ.தி.மு.க அரசு எந்த ஒரு அழுத்தமும் கொடுக்கவில்லை.

எனவே இந்த நிமிடம் வரை நீட் தேர்வு நடைமுறையில்தான் இருக்கிறது. நீட் தேர்வுக்கு மாணவர்கள் தயாராக வேண்டிய சூழல் இருந்து கொண்டிருக்கிறது. நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்பது அரசின் முடிவு. எனவே நீதிபதி ஏ.கே.ராஜனின் அறிக்கை வந்த பிறகு தான் மேற்கொண்டு இதற்கான நடவடிக்கை தொடரும்.

கொரோனா இறப்புகளை மறைப்பதற்கு எந்த அவசியமும் இல்லை. கொரோனா 3-வது அலை வரவே கூடாது. ஏற்கனவே முதல் அலை, 2-வது அலையில் மக்கள் பட்ட கஷ்டங்கள் போதும். 3-வது அலை வந்தாலும் அதனை எதிர்கொள்ள தமிழக அரசு தயார் நிலையில் உள்ளது.

குழந்தைகளுக்கான சிறப்பு வார்டுகள் திறக்கப்பட்டு வருகின்றன. மேலும், தமிழகத்தில் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. இதுவரை 2,131 பேர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கான சிகிச்சை அளிக்க கூடிய ஆம்போடெரிசின் மருந்து 10 ஆயிரம் அளவில் கையிருப்பில் உள்ளது.

தமிழகத்தை விட குறைவான மக்கள் தொகை கொண்ட கேரளாவில் நோயின் தாக்கம் நேற்று முன்தினம் 13.8 சதவீதமாக இருந்தது. ஆனால் தமிழகத்தில் 5 சதவீதமாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com