கழிவறையை சுத்தம் செய்ய மாணவர்கள்... அரசு பள்ளி தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம்


கழிவறையை சுத்தம் செய்ய மாணவர்கள்... அரசு பள்ளி தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம்
x

பள்ளியில் கழிவறையை மாணவர்கள் சுத்தம் செய்த விவகாரத்தில் தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை அருகே நமணசமுத்திரம் குடியிருப்பு கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இதில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை 30-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் பள்ளியில் கழிவறையை சுத்தம் செய்ய மாணவர்கள் சிலரை பயன்படுத்தியுள்ளனர். மாணவர்கள் கழிவறையை சுத்தம் செய்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.

இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த மாவட்ட கலெக்டர் அருணா, அறந்தாங்கி தொடக்கக்கல்வி அதிகாரி கலாராணிக்கு உத்தரவிட்டார். இதையடுத்து தொடக்கக்கல்வி அதிகாரி கலாராணி மற்றும் வட்டார கல்வி அதிகாரி கருணாகரன் ஆகியோர் அந்த பள்ளியில் நேரில் விசாரணை நடத்தினர். இதில் மாணவர்கள், ஆசிரியர், தலைமை ஆசிரியர், சமையலர், மாணவர்களின் பெற்றோர் தரப்பில் விசாரித்தனர்.

இந்த விசாரணையின்போது அவர்கள் தெரிவித்ததை அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர். கல்வித்துறை அதிகாரிகள் விசாரணையையொட்டி பள்ளியில் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. கல்வித்துறை அதிகாரி விசாரணைக்குபின் அறிக்கையை கலெக்டர் அருணா, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சண்முகம் ஆகியோரிடம் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதன்அடிப்படையில் நடவடிக்கை எடுக்க கலெக்டர் அருணா உத்தரவிட்டார். அதன்படி பள்ளி தலைமை ஆசிரியை கலாவை பணியிடை நீக்கம் செய்தும், ஆசிரியர் தினேஷ் ராஜாவை பணியிட மாற்றம் செய்தும் தொடக்கக்கல்வி அதிகாரி கலாராணி நேற்று மாலை உத்தரவிட்டார். பள்ளியில் மாணவர்கள் கழிவறையை சுத்தம் செய்த விவகாரத்தில் எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கையால் கல்வித்துறை வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

1 More update

Next Story