

உரிய நேரத்தில்...
தமிழகத்தில் கோடை விடுமுறையை தொடர்ந்து 6 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்றும் (திங்கட்கிழமை), 1 முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு வருகிற 14-ந்தேதியும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இந்நிலையில், தமிழக அரசால் வழங்கப்படும் இலவச பஸ் பாசை பயன்படுத்தி பஸ்களில் பயணிக்கும் மாணவ, மாணவிகளை கையாளும் முறை, நடைமுறைகள் குறித்து டிரைவர், கண்டக்டர்களுக்கு திருச்சி அரசு போக்குவரத்துக்கழக மண்டல பொது மேலாளர் ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அதன்படி, அனைத்து டவுன் பஸ்கள் மற்றும் கிராம பகுதிகளுக்கு செல்லும் புறநகர் பஸ்களை உரிய நேரத்தில், உரிய வழித்தடத்தில் முறையாக இயக்க வேண்டும். அனைத்து வழித்தடங்களில் செல்லும் பஸ்கள், பஸ் நிறுத்தத்தில் இருந்து சற்று தூரம் தள்ளி நிறுத்துவதை தவிர்த்து, உரிய இடத்தில் நிறுத்தி பயணிகளை ஏற்றி, இறக்கி செல்ல வேண்டும். பள்ளி மாணவ, மாணவிகள் படிக்கட்டில் தொங்கிக் கொண்டு செல்வதை தவிர்க்க டிரைவர் மற்றும் கண்டக்டர்கள், ஒவ்வொரு பஸ் நிறுத்தத்திலும் முறையான கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும்.
இலவச பஸ் பாஸ்
பள்ளி மாணவர்கள் மூலம் புகார்கள் கூறும்போது கிளை மேலாளர் மற்றும் சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியருக்கு உடனடியாக தகவல் தெரிவித்து உரிய தீர்வு காண வேண்டும். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், அரசு போக்குவரத்துக்கழகத்தின் மூலம் முன்பு வழங்கப்பட்ட இலவச பஸ் பாஸ் அட்டை வைத்திருந்தாலும், பள்ளி சீருடை அணிந்திருந்தாலும் அவர்களை பஸ்களில் இலவச பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும். இந்த நடைமுறைகளை உரிய முறையில் பின்பற்றி பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களிடம் இருந்து எந்தவிதமான புகாரும் எழாத வகையில் பணிபுரிந்து அரசு போக்குவரத்துக் கழகத்துக்கு நற்பெயர் பெற்றுத்தர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் இந்த உத்தரவு அனைத்து அரசு போக்குவரத்துக்கழக பணிமனைகளிலும் டிரைவர், கண்டக்டர்கள் அறிந்து கொள்ளும் வகையில் அறிவிப்பு பதாகைகளாகவும் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.