

நாகர்கோவில்,
மழை காரணமாக பள்ளிக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று சமூக வலைதளங்களில் கோரிக்கை விடுத்த மாணவர்களுக்கு, கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்ட கலெக்டர்கள் அளித்த பதில்கள் கவனம் ஈர்த்துள்ளன.
கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு லேசான மழை பெய்தது. இதனால், பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படும் என்று மாணவர்கள் எதிர்பார்த்தனர். இதற்கிடையே, பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.
இதையடுத்து, கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் பிரதாப், இரவு 10 மணிக்கு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டார். அதில், குமரி மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படவில்லை என்றும், மாணவர்கள் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் தெரிவித்திருந்தார்.
கலெக்டரின் இந்தப் பதிவுக்கு கீழே மாணவர்கள் பலரும் விடுமுறை கேட்டு கருத்துகளைப் பதிவிட்டனர். மழையால் பள்ளி வளாகங்களில் சேறும் சகதியுமாக இருப்பதாகவும், ஈரமான சீருடையுடன் பள்ளிக்கு வருவது சிரமமாக இருப்பதாகவும் சிலர் குறிப்பிட்டனர். மேலும், எங்களது நிலைமையைப் புரிந்துகொண்டு விடுமுறை அளிக்க வேண்டும் என்றும், கலெக்டரும் பள்ளிப் பருவத்தைக் கடந்து வந்தவர்தானே என்றும் மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர். மற்றொரு மாணவர், அன்று கணிதத் தேர்வு இருப்பதாகக் குறிப்பிட்டு, பள்ளிக்கு விடுமுறை அளிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
இதற்குப் பதிலளித்த கலெக்டர் பிரதாப், வதந்திகளை நம்பாமல் பள்ளிக்குச் செல்லுமாறு மாணவர்களுக்கு அறிவுறுத்தினார்.
இதேபோல், திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் ஆனந்த் மோகனின் இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் மாணவர்கள் விடுமுறை கேட்டு கருத்துகளைப் பதிவிட்டனர். விடுமுறை அளிக்காவிட்டால், கலெக்டராக இருப்பதில் என்ன பயன் என்றும், ஐ.ஏ.எஸ். தேர்வில் தோல்வியடைந்துவிட்டீர்களா என்றும் சில மாணவர்கள் கிண்டலாகக் கேட்டிருந்தனர்.
இதற்குப் பதிலளித்த கலெக்டர் ஆனந்த் மோகன், இங்க சில பேரு, லீவு விடலன்னா கலெக்டரையே பெயில்னு, எமோஷனல் பிளாக்மெயில் பண்ணிட்டு இருக்கானுவ... உங்க கஷ்டம்லாம் புரியுது... இந்த ஓவரு 'ஆக்டிங்' தான்டா தாங்க முடியல. கவலைப்படாதீங்க... நிஜமாவே கனமழை பெஞ்சா, நீங்க யாரும் கேக்காமலேயே லீவு வரும். உங்க பாதுகாப்புக்கு இந்த கலெக்டர் அங்கிள், எப்பவும் கேரண்டி' என, நெல்லை வட்டார பேச்சு வழக்கில், நகைச்சுவையாக பதில் அளித்துள்ளார்.
மழை விடுமுறை கேட்டு மாணவர்கள் வெளியிட்ட கருத்துகளும், அதற்குக் கலெக்டர்கள் அளித்த அறிவுரைகள் மற்றும் நகைச்சுவையான பதில்களும் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.