அரசு பள்ளியில் தலைமை ஆசிரியைக்கு ஆதரவாக மாணவிகள் போராட்டம்

அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியைக்கு ஆதரவாகவும், தவறான புகார் கொடுத்த பெற்றோரை கண்டித்தும் மாணவிகள் நேற்று பள்ளியின் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசு பள்ளியில் தலைமை ஆசிரியைக்கு ஆதரவாக மாணவிகள் போராட்டம்
Published on

ஜோலார்பேட்டை,

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தாமதமாக வரும் மாணவிகளை தலைமை ஆசிரியை சாந்தி தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் சில மாணவிகளின் பெற்றோர் கடந்த 9-ந் தேதி பள்ளியின் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

ஜோலார்பேட்டை போலீசார், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனி சுப்பராயன் ஆகியோர் சென்று பெற்றோர்களிடமும், தலைமை ஆசிரியையிடமும் விசாரணை மேற்கொண்டனர். அப்போது பெற்றோர்கள் மற்றும் மாணவிகள் தலைமை ஆசிரியை குறித்து புகார் தெரிவித்தனர். இதுகுறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்தார்.

மாணவிகள் ஆர்ப்பாட்டம்

இந்தநிலையில் நேற்று முன்தினம் இந்த பள்ளியில் கல்வி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது. இதில் மாணவிகளின் பெற்றோர்கள் மேலாண்மை கல்வி குழு நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் நேற்று பள்ளி மாணவிகள் பெரும்பாலானோர் தலைமை ஆசிரியைக்கு ஆதரவாகவும், தவறான புகார் கொடுத்த பெற்றோரை கண்டித்தும் பள்ளி நுழைவு வாயில் முன்பு அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை போலீசார், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனிசுப்பராயன் ஆகியோர் சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வகுப்புகளுக்கு அனுப்பினர்.

இதனையடுத்து அதிகாரிகள் தலைமை ஆசிரியை சாந்தி மற்றும் கல்வி மேலாண்மை குழு நிர்வாகிகளிடம் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com