பஸ் படிக்கட்டுகளில் மாணவர்கள் தொங்கியபடி செல்வதை தடுக்க வேண்டும்

சாலை விபத்துகளை தடுக்க பஸ் படிக்கட்டுகளில் மாணவர்கள் தொங்கியபடி செல்வதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டர் மோகன் உத்தரவிட்டார்
பஸ் படிக்கட்டுகளில் மாணவர்கள் தொங்கியபடி செல்வதை தடுக்க வேண்டும்
Published on

விழுப்புரம்

ஆலோசனை கூட்டம்

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சட்டம்-ஒழுங்கு மற்றும் சாலை பாதுகாப்பு குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு கலெக்டர் மோகன் தலைமை தாங்கி சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு குறித்து மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் பேசியதாவது:-

குறைந்தபட்ச தண்டனை

ஊராட்சிகளை பொறுத்தவரை சுடுகாடு பாதை மற்றும் கிராமங்களுக்கான சாலை தொடர்பாக பொதுமக்களிடையே கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. வருவாய்த்துறையினரும், காவல்துறையினரும் ஒருங்கிணைந்து சம்பந்தப்பட்ட கிராமப்பகுதிகளில் பொதுமக்களிடம் தக்க ஆலோசனை வழங்கி மீண்டும் அப்பகுதியில் சட்டம்-ஒழுங்கு கெடாத வண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டும்.

கிராமப்பகுதிகளிலிருந்து நகர்பகுதிகளுக்கு பள்ளி- கல்லூரிகளுக்கு வரும் மாணவர்கள் பஸ் படிக்கட்டில் தொங்கிய படியும், பல்வேறு சாகசங்கள் செய்தபடியும் வருவதா லேயே விபத்துகள் ஏற்படுகின்றன. இதைத்தடுக்க காவல்துறையினர் இதுபோன்ற தவறுகள் செய்யும் மாணவர்களுக்கு குறைந்தபட்ச தண்டனை வழங்கினால்தான் தவறுகள் நடக்காமல் பார்த்துக்கொள்ள முடியும். காவல்துறையினர் இதில் சிறப்பு கவனம் எடுக்க வேண்டும்.

சிகை அலங்காரம்

அதுபோல் மாணவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறையினர் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். ஒரு சில மாணவரின் சிகை அலங்காரம் என்பது அலங்கோலமாக இருக்கிறது. இதை மாற்றி படிக்கும் வயதில் நல்ல பழக்கவழக்கங்களுடன் ஒழுக்கமான முறையில் பயின்று வர அறிவுறுத்த வேண்டும்.

மேலும் தனியார் பஸ்கள் அதிவேகத்துடன் செல்வது மட்டுமன்றி பஸ் நிறுத்தங்களில் நடுரோட்டில் நிறுத்துவதால் விபத்துகள் ஏற்படுகின்றன. இதுகுறித்து வட்டார போக்குவரத்துத்துறை மற்றும் போக்குவரத்து காவல்துறை ஒருங்கிணைந்து அவ்வப்போது ஆய்வு செய்து விதிமுறைகளை மீறுபவர்களை கண்டறிந்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுவாக இரவு நேரங்களில் தான் அதிகளவில் விபத்துகள் நடைபெறுகின்றன. இதை தடுக்கும் வகையில் அதிக விபத்து நடைபெறும் பகுதிகளை கண்டறிந்து அங்கு போதிய அளவு ஒளிரும் எச்சரிக்கை பலகை, தேவைப்படும் இடங்களில் வேகத்தடை அமைக்க வேண்டும்.

வாகன தணிக்கை

குறிப்பிட்ட நேரத்தில் விபத்து நடப்பதாக தெரிந்தால் அந்த பகுதியில் காவல்துறையினர் வாகன தணிக்கை மேற்கொண்டு மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா, மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், மாவட்ட வன அலுவலர் சுமேஷ் சோமன், திண்டிவனம் சப்- கலெக்டர் அமித், உதவி போலீஸ் சூப்பிரண்டுகள் அபிஷேக்குப்தா, ஹர்ஸ்சிங் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com