

வாலாஜா சன்பீம் சி.பி.எஸ்.இ. பள்ளி ஆண்டு விழா நேற்று நடந்தது. விழாவிற்கு சன்பீம் பள்ளிகளின் தலைவர் த.ஹரிகோபாலன் தலைமை தாங்கி பேசினார். தாளாளர் தங்கபிரகாஷ், துணைத் தலைவர் டாக்டர் ஜோன் ஆர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி முதல்வர் ஆல்வின் ராஜன் வரவேற்றார். துணை முதல்வர் டுவைன் டோமினிக் நெல்சன் ஆண்டு அறிக்கை வாசித்தார். பள்ளி துணைத் தலைவர் டாக்டர் ஜார்ஜ் அரவிந்த் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து வைத்து பேசினார்.
சிறப்பு விருந்தினராக சென்னை ஐகோர்ட்டு ஓய்வு பெற்ற நீதிபதி ராஜ சூர்யா கலந்து கொண்டு கல்வி மற்றும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய மாணவ, மாணவிகளுக்கு 279 விருதுகளையும், ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை நேதாஜி ஹவுசுக்கும், கல்வி சார் செயல்பாடுகளில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை பட்டேல் ஹவுசுக்கும், சயீன்ஸ்பீம் ஒலிம்பியாட் தேர்வில் முதலிடம் பிடித்த 7-ம் வகுப்பு மாணவர் காமேஷிற்கு சிறப்பு பரிசும் வழங்கி பேசினார்.
அப்போது நமது முன்னோர்கள் நல்ல அரசியல் அமைப்பினை ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர். இறையாண்மை, மதச்சார்பின்மை, ஜனநாயகம், குடியரசு போன்ற இந்திய அரசியல் அமைப்பு பற்றி மாணவர்கள் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும், சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் போன்றவை பிரெஞ் அரசியல் அமைப்பிலிருந்து நாம் பெற்றுக் கொண்டோம். தேர்வு நெருங்கிக் கொண்டிருப்பதால் மாணவர்கள் மிகப்பெரிய மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். எந்த ஒரு செயல் நமக்கு மன உளைச்சலை உருவாக்குகிறதோ அதனை மறத்தல் வேண்டும். அப்பொழுதுதான் அதில் இருந்து நாம் மீள முடியும் என்றார்.
விழாவில் நீதிபதிகள், முக்கிய பிரமுகர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் ஆசிரியை ஜானகி ஹரி பாபு நன்றி கூறினார்.