நாமக்கல் அருகே மரத்தின் உச்சியில் அமர்ந்து ஆன்லைன் வகுப்பில் பங்கேற்கும் மாணவர்கள்

ஆன்லைன் வகுப்புக்காக மரத்தின் உச்சியில் அமர்ந்து மாணவர்கள் படிக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.
நாமக்கல் அருகே மரத்தின் உச்சியில் அமர்ந்து ஆன்லைன் வகுப்பில் பங்கேற்கும் மாணவர்கள்
Published on

செல்போன் கோபுரம் இல்லை

நாமக்கல் மாவட்டம் முள்ளுக்குறிச்சி அருகே நாமகிரிப்பேட்டை ஒன்றியம் பெரப்பஞ்சோலை மற்றும் பெரியகோம்பை ஊராட்சிகள் உள்ளன. இங்கு செல்போன் கோபுரங்கள் இல்லாததால் சிக்னல் சரிவர கிடைப்பதில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அந்த பகுதி மக்கள் செல்போனை சரிவர பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இந்த பகுதியில் 20-க்கும் மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் உள்ளனர். தற்போது கொரோனா நோய் பரவல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு உள்ளதால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் பெரப்பஞ்சோலை மற்றும் பெரியகோம்பை பகுதிகளில் செல்போனுக்கு வரும் அழைப்புகளை எடுத்து பேசுவதற்கே போதிய சிக்னல் வசதி கிடைப்பதில்லை

என்ற புகார் இருந்து வருகிறது.

கல்வி கேள்விக்குறி

இதனால் மாணவர்களின் கல்வி கேள்விக்குறியாகி உள்ளதாக அப்பகுதி பொதுமக்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர். மேலும் அந்த பகுதியை சேர்ந்த மாணவர்கள் ஆன்லைனில் கல்வி கற்க சீராக செல்போன் சிக்னல் கிடைக்கும் மரங்களில் ஏறியும், வீட்டு மொட்டை மாடிகள் மற்றும் மலை குன்றுகளுக்கு ஏறிச்சென்றும் ஆன்லைன் வகுப்புகளில் பயின்று வருகின்றனர்.

இதுகுறித்து நாமக்கல் உதவி கலெக்டர் கோட்டைக்குமார் கூறியதாவது:-

சல்போன் சிக்னல் கிடைக்காத காரணத்தால் மாணவர்கள் மரத்தின் உச்சியில் அமர்ந்து ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்பதாக தகவல் வந்துள்ளது. இது குறித்து நாளை (இன்று) அந்த பகுதியில் ஆய்வு மேற்கொள்ள உள்ளேன். ஆய்வுக்கு பிறகு அந்த பகுதியில் செல்போன் சிக்னல் கிடைக்காதது உறுதி செய்யப்பட்டால் விரைவில் மாணவ, மாணவிகளின் நலன்கருதி உரிய

நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com