

சென்னை,
கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு இருப்பதால், 1 முதல் 12-ம் வகுப்பு வரையில் அனைத்து மாணவர்களும் தேர்வு எழுதாமலேயே தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவித்தது.
உயர்கல்வியில் சேருவதற்கு பிளஸ்-2 மதிப்பெண் அவசியம் என்பதால், அவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது எப்படி என்பது குறித்து ஆராய ஒரு குழுவும் அமைக்கப்பட்டு அவர்களும் ஆராய்ந்து வருகிறார்கள்.
இந்த நிலையில் தேர்வுத்துறை சார்பில் பிளஸ்-2 மதிப்பெண்ணை கணக்கீடு செய்வதற்காக, அனைத்து பள்ளிகளுக்கும் ஒரு அறுவுறுத்தலை வழங்க, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டு இருக்கிறது.
சமர்ப்பிக்க வேண்டும்
அதில், 2020-21-ம் கல்வியாண்டில் பிளஸ்-2 படித்த மாணவர்கள், பிளஸ்-1 சேர்க்கையின் போது சமர்ப்பித்த சான்றிதழ்கள், பதிவுகளுடனான பட்டியலை, அவர்களின் எஸ்.எஸ்.எல்.சி. மதிப்பெண் பட்டியலுடன் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் வருகிற 25-ந்தேதி முதல் 31-ந்தேதிக்குள் சரிபார்க்க வேண்டும்.
சரிபார்க்கப்பட்ட இறுதி பட்டியலில் பள்ளி தலைமை ஆசிரியர்கள் சான்றளிக்க வேண்டும். அதனை மாவட்ட தேர்வுத்துறை உதவி இயக்குனரிடம் கண்டிப்பாக சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை அடிப்படையாக கொண்டு பிளஸ்-2 மதிப்பெண் கணக்கிடப்பட உள்ளதா? என்பது குறித்து முழு விவரம் தெரியவில்லை என்றாலும், பிளஸ்-2 மாணவர்களின் எஸ்.எஸ்.எல்.சி. மதிப்பெண்ணை தற்போது பதிவேற்றம் செய்ய சொல்லி இருப்பது, பிளஸ்-2 மதிப்பெண்ணை கணக்கீடு செய்வதற்கு அது அடித்தளமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கல்வித்துறை தீவிரம்
இதற்கிடையில், பிளஸ்-2 பொதுத் தேர்வை ரத்து செய்த அனைத்து மாநிலங்களும் ஜூலை 31-ந்தேதிக்குள் அதற்கான மதிப்பெண் முடிவுகளை வெளியிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.
அந்தவகையில் தமிழகத்தில் பிளஸ்-2 மதிப்பெண் கணக்கிடுவதற்கான பணிகளில் தேர்வுத்துறையும், கல்வித் துறையும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அதற்கான அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது.