

பர்கூர்:
பர்கூரில் நேற்று பிற்பகல் 2 மணி அளவில் திடீரென கனமழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரம் கொட்டித்தீர்த்த இந்த மழையால் பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் அவதிக்குள்ளனர். பர்கூர் தாலுகா அலுவலகம் எதிரில் உள்ள மனவளர்ச்சி குன்றியோர் பள்ளி, அரசு மேல் நிலைப்பள்ளி, பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது. பள்ளிகளை வெள்ளம் சூழ்ந்ததால் மாணவ-மாணவிகள், பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர். வாரச்சந்தையில் மழைநீர் தேங்கியதால் காய்கறிகள், கீரைகள் உள்ளிட்ட பொருட்கள் நனைந்து சேதமடைந்தன. நகரில் மழை நீர் தேங்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து தாசில்தார் பன்னீர்செல்வி பேரூராட்சி தலைவர் சந்தோஷ்குமார் ஆகியோர் விரைந்து சென்று மழை நீர் தேங்கியுள்ள பகுதிகளை ஆய்வு செய்தனர்.