

பள்ளி விடுதி வசதி
கடமலைக்குண்டு அருகே குமணன்தொழு கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் காமன்கல்லூர், கோரையூத்து, அரசரடி, கோம்பைத்தொழு உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்த பள்ளியில் மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்கான விடுதி வசதி இல்லை. இதனால் வெளியூர் மாணவ-மாணவிகள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த பள்ளிக்கு விடுதி வசதி ஏற்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் பள்ளியில் விடுதி வசதி ஏற்படுத்தவில்லை.
மாணவர்கள் கல்வி பாதிப்பு
இந்த நிலையில் கொரோனா நோய் தொற்று காலத்திற்கு பின்பு வருமானம் பாதிக்கப்பட்டதால் அரசரடி, கோம்பைதொழு உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் வெளியூர்களுக்கு கூலி வேலைகளுக்கு சென்று விட்டனர். பள்ளியில் விடுதி வசதி இல்லாததால் ஏராளமான பெற்றோர்கள் பாதுகாப்பு கருதி மாணவிகளின் படிப்பை நிறுத்தி விட்டனர்.
இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதுடன் கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் சேர்க்கை விகிதம் பாதியாக குறைந்து விட்டது. தொடர்ந்து இந்த நிலை காணப்பட்டால் வரும் கல்வி ஆண்டுகளில் மேலும் சேர்க்கை விகிதம் குறையும் நிலை உள்ளது. எனவே குமணன்தொழு பள்ளியில் விடுதி வசதி ஏற்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும், பெற்றோர்- ஆசிரியர் கழக சங்கத்தினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.