கட்டமைப்பு, அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு:தேனாடு அரசு பள்ளிக்கு கூடுதல் கட்டிடம் கட்ட நடவடிக்கை-மாவட்ட கண்காணிப்பு அதிகாரி தகவல்

கோத்தகிரி அருகே உள்ள தேனாடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் கட்டமைப்பு, அடிப்படை வசதிகள் குறித்து கண்காணிப்பு அதிகாரி திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பள்ளிக்கு கூடுதல் கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
கட்டமைப்பு, அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு:தேனாடு அரசு பள்ளிக்கு கூடுதல் கட்டிடம் கட்ட நடவடிக்கை-மாவட்ட கண்காணிப்பு அதிகாரி தகவல்
Published on

கோத்தகிரி

கோத்தகிரி அருகே உள்ள தேனாடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் கட்டமைப்பு, அடிப்படை வசதிகள் குறித்து கண்காணிப்பு அதிகாரி திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பள்ளிக்கு கூடுதல் கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

திடீர் ஆய்வு

தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஆணையாளரும், நீலகிரி மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான வெங்கடேஷ்வரன் கோத்தகிரி அருகே உள்ள தேனாடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அரசுப் பள்ளி மாணவர்களின் கற்றல் இடைவெளியை போக்கும் வகையில் தமிழக அரசு கொண்டு வந்துள்ள 'எண்ணும் எழுத்தும்' திட்டத்தின் கீழ் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு எவ்வாறு கல்வி கற்பிக்கப்படுகிறது என பள்ளி தலைமை ஆசிரியர் வசந்தகுமாரி, ஆசிரியர் தர்மராஜ் ஆகியோரை வகுப்புகள் எடுக்க வைத்து ஆய்வு செய்தார். பின்னர் பள்ளி மாணவ, மாணவிகளுடன் உரையாடி, அவர்களின் கற்றல் திறன் குறித்து ஆய்வு செய்ததுடன், இந்தத் திட்டத்தில் கல்வி கற்கும் போது மாணவர்களுக்கு ஏதேனும் இடர்பாடுகள் உள்ளதா? எனக் கேட்டறிந்தார்.

கூடுதல் கட்டிடம் கட்ட உத்தரவு

தொடர்ந்து பள்ளியின் கட்டமைப்பு, வகுப்பறைகள், அடிப்படை வசதிகளை ஆய்வு செய்து பள்ளிக்கு கூடுதலாக கட்டிடம் கட்டிக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். மேலும் அரசு பள்ளியில் 82 குழந்தைகள் சேர்க்கப்பட்டு அவர்களுக்கு தனியார் பள்ளிகளுக்கு இணையான சீருடை மற்றும் கல்வி அளிக்கப்படுவதுடன், வகுப்பறைகள் குழந்தைகளைக் கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது திருப்தியளிப்பதாக உள்ளது எனக் கூறி பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களை அவர் பாராட்டி ஊக்குவித்தார்.

இந்த ஆய்வின் போது குன்னூர் கோட்டாட்சியர் புஷ்ண குமார், தோட்டக்கலை துறை இணை இயக்குனர் சிபிலா மேரி, கூடலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஸ்ரீதர், கோத்தகிரி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெயபால், ஆறுமுகம், தாசில்தார் காயத்ரி உள்பட அதிகாரிகள் பலர் உடனிருந்தனர். தொடர்ந்து கரிக்கையூர் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளியிலும் கண்காணிப்பு அலுவலர் ஆய்வு மேற்கொண்டார்.

இதேபோல் கோத்தகிரி பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகளையும் அவர் ஆய்வு செய்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com