கண்ணீர் விட்டு அழுத துணை மேயர்

கும்பகோணம் மாநகராட்சி கூட்டத்தில் துணை மேயர் கண்ணீர் விட்டு அழுததால் பரபரப்பு ஏற்பட்டது.
கண்ணீர் விட்டு அழுத துணை மேயர்
Published on

கும்பகோணம்;

கும்பகோணம் மாநகராட்சி கூட்டத்தில் துணை மேயர் கண்ணீர் விட்டு அழுததால் பரபரப்பு ஏற்பட்டது.

மாநகராட்சி கூட்டம்

கும்பகோணம் மாநகராட்சி கூட்டம் மேயர் சரவணன்(காங்கிரஸ்) தலைமையில் நடந்தது. துணை மேயர் சுப.தமிழழகன்(தி.மு.க.), மாநகராட்சி ஆணையர் செந்தில்முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் தி.மு.க., அ.தி.மு.க., ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு உள்ளிட்ட கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் 64 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.முன்னதாக கூட்டத்தில் கலந்து கொண்ட தி.மு.க. கவுன்சிலர்கள் குட்டி தட்சிணாமூர்த்தி, முருகன் அனந்தராமன், செல்வராஜ் ஆகியோர் கூட்டத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களில் மாநகராட்சி மேயர் உடனடியாக கையெழுத்திடாமல் காலம் கடத்துகிறார். இதனால் மாநகராட்சி பகுதியில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகளில் காலதாமதம் ஏற்படுகிறது என்று கூறினர்.

சரமாரி குற்றச்சாட்டு

மேலும், மேயரின் செயல்பாடுகள் சரியில்லை. கவுன்சிலர்களுக்கு உரிய அறிவிப்பு கொடுக்காமல் வார்டு பகுதிகளுக்கு சென்று ஆய்வில் ஈடுபடுகிறார் என்று மேயர் மீது சரமாரியாக பல்வேறு குற்றச்சாட்டுகளை கவுன்சிலர்கள் தெரிவித்தனர். இதனால் கூட்டத்தில் கூச்சல்-குழப்பம் ஏற்பட்டது. இதற்கு மேயர் சரவணன் பதில் அளித்து பேசினார். அவர் பேசும்போது, தான் மாநகராட்சி மேயராக பதவியில் இருக்கும்போது துணை மேயராக பொறுப்பு வகிக்கும் சு.ப.தமிழழகனை மாநகராட்சியின் செயல் தலைவர் என குறிப்பிட்டு மாநகராட்சி பகுதியில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு இருப்பதால் தனது பதவிக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது. இதற்கு தி.மு.க. உறுப்பினர்கள் பதில் அளிக்க வேண்டும் என்றார்.

மேயரை முற்றுகையிட்டு கோஷம்

இதைக்கேட்டு ஆத்திரம் அடைந்த தி.மு.க. கவுன்சிலர்கள் மாமன்றத்துக்கு வெளியே நடக்கும் கட்சி விவகாரங்கள் குறித்தும் கட்சியினரால் ஒட்டப்படும் சுவரொட்டிகள் குறித்தும் மேயர் எவ்வாறு மாமன்ற கூட்டத்தில் கேள்வி எழுப்பலாம் எனக் கூறி மேயர் இருக்கை அருகே சென்று மேயரை முற்றுகையிட்டு கோஷம் எழுப்பினர்.இதைத்தொடர்ந்து அவர்களை சமாதானப்படுத்திய துணை மேயர் சு.ப. தமிழழகன், கட்சியின் தனிப்பட்ட விவகாரங்கள் குறித்து மாமன்ற கூட்டத்தில் கேள்வி எழுப்பியுள்ள மேயர், தனது செயல்பாட்டுக்கு உரிய பதிலை தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்தியதோடு உடனடியாக இந்த மன்ற கூட்ட அரங்கில் இருந்து ஒட்டுமொத்தமாக வெளியேற தயாராக உள்ளோம் என கூறினார்.

கண்ணீர் விட்டு அழுதார்

இதனால் கூட்டத்தில் தான் பேசியதை வாபஸ் பெறுவதாக மேயர் சரவணன் கூறினார். இதைத்தொடர்ந்து கூட்டத்தில் துணை மேயர் சுப.தமிழழகன் பேசினார். அப்போது அவர், நான் தி.மு.க.வுக்கும் கட்சி தலைவருக்கும் விசுவாசமாக இருந்து வருகிறேன். கும்பகோணம் மேயர் பொறுப்பு காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டபோது நான் சென்னைக்கு சென்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்தேன். அப்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் என்னிடம் மேயர் பதவி உனக்கு கிடைக்காததில் வருத்தம் இல்லையே தமிழ் என என்னிடம் கேட்டார். அந்த வார்த்தை ஒன்றே எனக்கு ஆறுதலாக இருந்து வருகிறது. எனக்கு அது ஒன்றே போதும் என கூறி கண்ணீர் விட்டு அழுதார். இதனால் தி.மு.க., காங்கிரஸ் மற்றும் அ.தி.மு.க. உறுப்பினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். துணை மேயா அழுததால் மாநகராட்சி கூட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com