

சென்னை,
சென்னையை அடுத்த வண்டலூர், ஊனமாஞ்சேரியில் உள்ள தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தில் 86 துணை போலீஸ் சூப்பிரண்டுகளின் பயிற்சி நிறைவு அணிவகுப்பு விழா நேற்று மாலை நடந்தது. இந்த விழாவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். பயிற்சியை நிறைவு செய்த 86 பேரின் அணிவகுப்பு மரியாதையை மு.க.ஸ்டாலின் திறந்த ஜீப்பில் சென்றபடி ஏற்றுக்கொண்டார். அதனைத்தொடர்ந்து நடந்த நிகழ்ச்சியில், போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு வரவேற்புரையாற்றினார். அதன் பின்னர், அவர் உறுதிமொழி வாசிக்க, பயிற்சி நிறைவுசெய்த துணை போலீஸ் சூப்பிரண்டுகள் உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர். அதன்தொடர்ச்சியாக உள்துறை செயலாளர் பிரபாகரராவ் விளக்க உரையாற்றினார்.
பயிற்சி நிறைவு செய்த 86 பேரில், ஒட்டுமொத்தமாக சிறப்பாக செயல்பட்டதற்காக பிரித்திவிராஜ் சவுகானுக்கு வீரவாளை மு.க.ஸ்டாலின் பரிசாக கொடுத்தார். பின்னர் ஒருங்கிணைந்த சைபர் பயிற்சி வளாகத்திற்கு அடிக்கல் நாட்டி, விழாவில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
இந்த அணிவகுப்பு மரியாதையை பார்க்கும்போது எனக்கு ஒரு கம்பீரம் தோன்றி யிருக்கிறது. உற்சாகம் பிறந்திருக்கிறது. மிடுக்கு ஏற்படுகிறது. அந்தளவு இந்த அணிவகுப்பு கம்பீரமாக இருந்தது. டி.என்.பி.எஸ்.சி. மூலம் தேர்ச்சிபெற்ற 86 புதிய துணை போலீஸ் சூப்பிரண்டுகள் பயிற்சி முடித்திருக்கிறீர்கள்.
புதிதாக காவல் களத்தில் இறங்கியுள்ள உங்கள் அனைவருக்கும் எடுத்துக்காட்டாக சொல்லத்தக்க மனிதராக உங்கள் போலீஸ் டி.ஜி.பி.யே இருக்கிறார். 1987-ம் ஆண்டு கோபிசெட்டிபாளையத்தில் உதவி கண்காணிப்பாளராக பணிக்கு சேர்ந்த சைலேந்திரபாபு இன்று தமிழக காவல்துறை தலைமைப்பணிக்கு வளர்ந்திருக்கிறார் என்றால், அதற்குள் அவரது உழைப்பும், முயற்சிகளும்தான் மிக மிக முக்கிய காரணம். அவரைப்போலவே பல்வேறு திறமைகளை நீங்கள் அனைவரும் வளர்த்துக்கொள்ளவேண்டும்.
அரசாங்கத்திலுள்ள எத்தனையோ துறைகளைப் போல காவல்துறையும் ஒரு துறைதான் என்று நீங்கள் நினைத்துவிடக்கூடாது. ஒரு அரசிடமிருந்து மக்கள் முதலில் எதிர்பார்ப்பது, அமைதியைத்தான். அந்த அமைதியை ஏற்படுத்தி தரவேண்டிய பெரும் பொறுப்பு காவல்துறைக்குதான் உண்டு. எந்த ஒரு நாட்டிலும் சட்டம் ஒழுங்கு சிறப்பாக அமைந்துவிட்டால், பொதுமக்கள் பாதுகாப்பான சூழலை உணர்ந்துவிட்டால் அந்த நாட்டில் மற்ற செயல்களை சரியாக செய்யமுடியும்.
சட்டம்-ஒழுங்கு சிறப்பாக அமைந்தால்தான் தொழில் சிறக்கும், முதலீடுகள் பெருகும்.
குற்றங்களுக்கு தண்டனை வாங்கித்தரும் துறையாக மட்டுமல்லாமல், குற்றங்கள் நடக்காமல் தடுக்கும் துறையாக காவல்துறை மாறவேண்டும் என்பதுதான் எனது ஆசை. அந்த ஆசை நிறைவேறும் என்ற நம்பிக்கை எனக்கு அதிகம் இருக்கிறது. ஒருங்கிணைந்த சைபர் கிரைம் அலுவலகத்துக்கு இன்று நான் அடிக்கல் நாட்டியுள்ளேன். இன்றைக்கு மிக மிக முக்கியமாக இது தேவையாக உள்ளது.
கொலை, ஆதாயக் கொலை, கொள்ளை, வழிப்பறி, திருட்டு, பாலியல் வன்முறைகள் ஆகியவைதான் மிகப்பெரிய குற்றங்களாக அடையாளம் காட்டப்பட்டு உள்ளன. ஆனால் இவை அனைத்தையும் விஞ்சியதாக சைபர் குற்றங்கள் பெருகிவிட்டன. தொழில்நுட்பம் வளர வளர குற்றம் செய்பவர்கள் அதனை பயன்படுத்துகிறார்கள். இணைய வசதி வந்துவிட்டபிறகு அடையாளமற்ற குற்றவாளிகள் பெருகிவிட்டார்கள்.
தொழில்நுட்பத்தை பயன்படுத்தி செய்யும் குற்றங்கள் பெருகிவிட்டன. இணையவழி யில் பொருளாதாரக் குற்றங்கள் அதிகமாகிவிட்டன. தொழில்நுட்ப சேவைகளை திருடுவது, தகவல்களை அழிப்பது, முகம்தெரியாதவர்கள் ஏமாற்றுவது, இணையதளங்கள் மூலமாக மிரட்டுவது, போலி பெயர்கள் மற்றும் போலி கணக்குகள் ஆகியவை பெருகிவருகின்றன. இந்த இணையதளங்கள் மூலமாக பாலியல் குற்றங்களும் அதிகமாகி வருகின்றன. நிதி குற்றவாளிகளும், பாலியல் குற்றவாளிகளும் நவீன தொழில்நுட்பத்தை அதிகமாக பயன்படுத்துகிறார்கள். இதனை கண்டுபிடித்து தடுப்பதற்கான நவீன வழிமுறைகள் நமக்கு வந்தாக வேண்டும்.
2030-ம் ஆண்டுக்குள் சைபர் குற்றங்கள் நடக்காத நாடாக மாற்றிக் காட்டப் போகிறோம் என்று ஐக்கிய நாடுகள் அறிவித்துள்ளன. எத்தகைய தொழில்நுட்பத்தை அவர்கள் உருவாக்கப்போகிறார்கள்? என்பதை தமிழக காவல்துறை தெரிந்துகொள்ளவேண்டும். காவல்துறையை சார்ந்தோரின் விருப்பங்கள், கோரிக்கைகள் அனைத்தும் விரைவில் நிறைவேற்றி தீருவோம் என்ற உறுதியை இந்த விழாவில் நான் தெரிவித்துக்கொள்கிறேன். அனைவரையும் தாங்கிப்பிடிக்கும் நிலமாக இருங்கள். தாகம் தணிக்கும் நீராக இருங்கள். உயிரூட்டும் காற்றாக இருங்கள். அனைவருக்கும் பொதுவான வானமாக இருங்கள். தீயவை பொசுக்கும் தீயாக இருங்கள். எப்போதும் சட்டத்தின் ஆட்சியை நிலை நிறுத்துவதில் உறுதியாக இருங்கள். மொத்தத்தில் மக்களின் காவல் அரணாக இருங்கள். இவ்வாறு அவர் பேசினார்.
இறுதியில் பயிற்சி இயக்குனர் பிரதீப் நன்றியுரையாற்றினார். அதன் பின்னர் போலீஸ் துறையில் பணி புரியும் மோப்ப நாய்களின் சாகச நிகழ்ச்சிகள் மற்றும் போலீசார்களின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. இதை மு.க.ஸ்டாலின் பார்த்து ரசித்தார். போலீஸ் துணை சூப்பிரண்டுகளாக பயிற்சியை நிறைவு செய்த 86 பேரில் 50-க்கும் மேற்பட்டோர் என்ஜினீயரிங் படித்தவர்கள், 3 பேர் பல் டாக்டர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விழாவில் மா.சுப்ரமணியன், சேகர்பாபு, அனிதா ராதாகிருஷ்ணன் உள்பட அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் இறையன்பு உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.