

சென்னை,
இந்திய விடுதலைப் போராட்ட வீரரும், மேடைப் பேச்சாளரும், எழுத்தாளருமான சுப்பிரமணிய சிவா, கடந்த 1884-ம் ஆண்டு அக்டோபர் 4-ந்தேதி தமிழ்நாட்டின் திண்டுக்கல் மாவட்டத்தில் பிறந்தார். அரசியல் போராட்டத்தையும் ஆன்மிக சிந்தனையையும் இணைத்துத் தமிழக மக்களிடையே விடுதலைத் தாகத்தை ஏற்படுத்தினார். அவரது வீரமிக்க மேடைப் பேச்சுகளுக்காக 'வீரமுரசு' என்றும், ஆன்மிக ஈடுபாட்டால் 'சுதந்திரானந்தர்' என்றும் அழைக்கப்பட்டார்.
இந்நிலையில் சுப்பிரமணிய சிவாவின் பிறந்த தினத்தை முன்னிட்டு, பா.ஜ.க. முன்னாள் மாநில தலைவரும், ‘வீ த லீடர்ஸ்’ அமைப்பின் நிறுவனருமான அண்ணாமலை ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-
“தமது வீரமிக்க பேச்சுகளாலும் எழுத்துகளாலும் மக்களிடையே விடுதலை உணர்வைத் தட்டி எழுப்பி, தலைசிறந்த சுதந்திரப் போராட்ட வீரர்களில் ஒருவராகத் திகழ்ந்த அமரர் சுப்பிரமணிய சிவாவின் பிறந்த தினம் இன்று.
தாய்நாட்டின் விடுதலைக்காக எண்ணற்ற இன்னல்களையும், தியாகங்களையும் எதிர்கொண்ட, அமரர் சுப்பிரமணிய சிவாவின் புகழைப் போற்றி வணங்குவோம்.”
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.