போரூர், பூந்தமல்லி போன்ற புறநகர் பகுதிகளில் மெட்ரோ ரெயிலுக்கான அடுத்தகட்ட பணிகள் தீவிரம்

சென்னையின் புறநகர் பகுதிகளான போரூர், பூந்தமல்லி உள்ளிட்ட பகுதிகளுக்கு கலங்கரை விளக்கத்தில் இருந்து வருகிற 2025-ம் ஆண்டு ரெயிலை இயக்குவதற்காக மெட்ரோ ரெயிலுக்கான அடுத்த கட்டப்பணிகள் தொடங்கி தீவிரமாக நடந்து வருகிறது.
போரூர், பூந்தமல்லி போன்ற புறநகர் பகுதிகளில் மெட்ரோ ரெயிலுக்கான அடுத்தகட்ட பணிகள் தீவிரம்
Published on

சென்னையில் முதல் கட்டப்பணிகள் நிறைவடைந்து 55 கிலோ மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து 2-வது கட்டமாக 118.9 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரெயில் திட்டத்திற்கான பாதை மற்றும் ரெயில் நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

குறிப்பாக, மாதவரம் முதல் சிறுசேரி சிப்காட் வரை 45.8 கிலோ மீட்டர் தூரத்திற்கு அமைக்கப்படும் 3-வது வழித்தடத்தில் 19.1 கிலோ மீட்டர் தூரத்திற்கு உயர்த்தப்பட்ட பாதையில் 20 ரெயில் நிலையங்களும், 26 கிலோ மீட்டர் தூரம் கொண்ட சுரங்கப்பாதையில் 30 ரெயில் நிலையங்களும் அமைக்கப்படுகிறது.

அதேபோல், கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரை 26.1 கிலோ மீட்டர் தூரத்திற்கு அமைக்கப்படும் 4-வது வழித்தடத்தில், 16 கிலோ மீட்டர் தூரத்திற்கு அமைக்கப்படும் உயர்த்தப்பட்ட பாதையில் 18 ரெயில் நிலையங்களும், 10.1 கிலோ மீட்டர் உயரம் கொண்ட சுரங்கப்பாதையில் 12 ரெயில் நிலையங்களும் அமைக்கப்படுகிறது. மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரை 47 கிலோ மீட்டர் தூரத்திற்கு அமைக்கப்படும் 5-வது வழித்தடத்தில் 41.2 கிலோ மீட்டர் தூரத்திற்கு உயர்த்தப்பட்ட பாதையில் 42 ரெயில் நிலையங்களும், 5.8 கிலோ மீட்டர் தூரத்திற்கு அமைக்கப்படும் சுரங்கப்பாதையில் 6 ரெயில் நிலையங்களும் அமைக்கப்படுகிறது.

சென்னையில் நடந்து வரும் 3 வழித்தடங்களில் கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரை 26.1 கிலோ மீட்டர் தூரத்திற்கு அமைக்கப்படும் 4-வது வழித்தடத்தில் ரெயிலை முதலில் இயக்க திட்டமிட்டு பணிகள் நடந்து வருகிறது.

அதிலும் குறிப்பாக, கோடம்பாக்கம் பவர்ஹவுஸ் முதல் பூந்தமல்லி வரையிலான பகுதிகளில் 2025-ம் ஆண்டு ஜூன் மாதம் ரெயில் இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

இதனை தொடர்ந்து 2026-ம் ஆண்டு கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரை ரெயில் இயக்கப்படுகிறது. இதற்காக தற்போது, நாசரேத்பேட்டை, போரூர் மற்றும் பூந்தமல்லி புறவழிச்சாலை பகுதிகளில் பணிகள் நடந்து வருகிறது. இதன் மூலம் சென்னையின் புறநகர் பகுதிகளிலும் மெட்ரோ ரெயில் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

கோடம்பாக்கத்தில் உள்ள பவர் ஹவுஸ் முதல் போரூர் சந்திப்பு வரையிலான 7.9 கிலோ மீட்டர் தூரத்தில் உயர்த்தப்பட்ட பாதைக்கான தூண்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

இந்தப்பாதையில் போரூர் அருகில் தூண்கள் அமைக்கும் பணி நிறைவடைந்து, அடுத்தக் கட்டமாக தூண்களின் மேல் உயர்த்தப்பட்ட பாதையில் தண்டவாளம் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்தப்பாதையில் உயர்த்தப்பட்ட பாதையில் 9 ரெயில் நிலையங்கள் வர உள்ளன.

அதேபோல், போரூர்- பூந்தமல்லி புறவழிச்சாலை இடையே 7.9 கிலோ மீட்டர் தூரத்தில் சென்னை புறவழிச்சாலை கிராசிங், ராமச்சந்திரா மருத்துவமனை, ஐயப்பன்தாங்கல் பஸ் நிலையம், காட்டுப்பாக்கம், குமணன் சாவடி, முல்லை தோட்டம், பூந்தமல்லி பஸ் நிலையம் மற்றும் பூந்தமல்லி புறவழிச்சாலை ஆகிய ரெயில் நிலையங்கள் வர உள்ளன. அத்துடன், பூந்தமல்லியில் வரவிருக்கும் ரெயில் நிலையங்கள் மற்றும் பணிமனையை இணைக்கும் உயர்த்தப்பட்ட பாதையும் அமைக்கப்படுகிறது.

பூந்தமல்லி நெடுஞ்சாலையில் பூந்தமல்லி பஸ் நிலையம் முதல் கரையான்சாவடி வரை போக்குவரத்து முறையில் மாற்றம் செய்யப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. இதனால் கரையான்சாவடியில் இருந்து பூந்தமல்லி பஸ் நிலையம் செல்ல கனரக வாகனங்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. பணிகளை நிறைவு செய்ய பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும்.

மேற்கண்ட தகவல்களை சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் கூறினார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com