

சென்னை,
வீடுகளில் மின் கட்டண செலவை குறைக்கும் வகையில், பிரதமர் சூரிய வீடு இலவச திட்டத்தின் கீழ், வீடுகளின் மேற்கூரையில் சூரியசக்தி மின் நிலையம் அமைக்க மத்திய அரசு மானியம் வழங்கி வருகிறது.
அதன்படி, 1 கிலோவாட் திறன் கொண்ட சூரியசக்தி மின் நிலையம் அமைக்க ரூ.30 ஆயிரமும், 2 கிலோவாட் அமைக்க ரூ.60 ஆயிரமும், அதற்கு மேல் திறன் கொண்ட நிலையங்களுக்கு ரூ.78 ஆயிரமும் மத்திய அரசு மானியமாக வழங்குகிறது.
இதனுடன் தமிழக அரசின் மேற்கூரை சூரியசக்தி மானிய திட்டமும் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தை தமிழக அரசு கடந்த செப்டம்பர் 21-ந்தேதி தொடங்கியது. இதன்படி, 1 கிலோவாட்டிற்கு ரூ.5 ஆயிரமும், 2 கிலோவாட்டிற்கு ரூ.10 ஆயிரமும், 3 கிலோவாட்டிற்கு ரூ.22 ஆயிரமும் தமிழக அரசு சார்பில் மானியம் வழங்கப்படுகிறது.
மத்திய அரசு மற்றும் தமிழக அரசு மானியங்களை சேர்த்து, 3 கிலோவாட் திறன் கொண்ட சூரியசக்தி மின் நிலையம் அமைக்க அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வரை மானியம் பெற முடியும். இந்த திட்டத்தில் பயன்பெற https://tnebitd.gov.in/usrp/ என்ற இணையதளத்தை மின்வாரியம் அறிமுகப்படுத்தியுள்ளது. வரும் மார்ச் மாதத்துக்குள் 1 லட்சம் வீடுகளில் சூரியசக்தி மின் நிலையங்களை அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
திட்டம் தொடங்கப்பட்ட 10 நாட்களில் மட்டும் 16 ஆயிரத்து 500 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதனால், தமிழகத்தில் மேற்கூரை சூரியசக்தி மின் நிலையம் அமைப்பதற்கான ஆர்வம் அதிகரித்து வருகிறது.