அ.தி.மு.க.வுக்கு அடுத்தடுத்து வெற்றி: சிவகங்கை மாவட்ட ஊராட்சி துணை தலைவராக சரஸ்வதி தேர்வு

சிவகங்கை மாவட்ட ஊராட்சி துணை தலைவராக அ.தி.மு.க. 8வது வார்டு உறுப்பினர் சரஸ்வதி அண்ணா தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.
அ.தி.மு.க.வுக்கு அடுத்தடுத்து வெற்றி: சிவகங்கை மாவட்ட ஊராட்சி துணை தலைவராக சரஸ்வதி தேர்வு
Published on

சிவகங்கை,

சிவகங்கை மாவட்டத்தில் மொத்தமுள்ள 16 ஊராட்சி வார்டுகளில், அ.தி.மு.க. 8 இடங்களை கைப்பற்றியது. இதேபோன்று, தி.மு.க. கூட்டணியில் தி.மு.க. 5, காங்கிரஸ் 2, இந்திய ஜனநாயக கட்சி 1 இடத்திலும் வெற்றி பெற்றன. இதனால் அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. கூட்டணி சமபலத்தில் இருந்தன.

இந்நிலையில் ஜனவரி 11, 30 மற்றும் மார்ச் 4 ஆகிய தேதிகளில் அறிவிக்கப்பட்ட மாவட்ட ஊராட்சி தலைவர், துணை தலைவர் தேர்தலை அ.தி.மு.க. கவுன்சிலர்கள் தொடர்ந்து புறக்கணித்ததால் பெரும்பான்மை இல்லாமல் தேர்தல்கள் ஒத்திவைக்கப்பட்டன.

இதனை தொடர்ந்து கொரோனா பரவல் காரணமாக மேலும் 6 மாதங்கள் தேர்தல் தள்ளிபோனது. இதனால், தி.மு.க.வை சேர்ந்த மாவட்ட கவுன்சிலர்கள் சிலர் தேர்தலை நடத்த வலியுறுத்தி உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தனர். இதனையடுத்து டிசம்பர் 4ந்தேதி சிவகங்கை மாவட்ட ஊராட்சி தலைவர், துணை தலைவர் தேர்தல் நடத்தப்படும் என தமிழக தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

எனினும் முதல் அமைச்சர் வருகையால் அன்றைய தினம் நடைபெற இருந்த தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் 4 முறை ஒத்திவைக்கப்பட்ட தேர்தல் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் அதிகாரியான மாவட்ட ஆட்சியர் மதுசூதனன் ரெட்டி தலைமையில் நடைபெற்றது.

இந்த தேர்தல் வாக்குப்பதிவில் இருவரும் சம வாக்குகளை பெற்றதால் குலுக்கல் முறையில் தேர்வு செய்ய மாவட்ட ஆட்சியர் முடிவு செய்தார். அதன்படி குலுக்கல் முறையில் நடத்தப்பட்ட தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் பொன்மணி பாஸ்கர் வெற்றி பெற்றார்.

இதனை தொடர்ந்து சிவகங்கை மாவட்ட ஊராட்சி துணை தலைவர் பதவிக்கு தேர்வு செய்யும் பணியும் குலுக்கல் முறையில் நடைபெற்றது. இதில், அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்ட 8வது வார்டு உறுப்பினர் சரஸ்வதி அண்ணா வெற்றி பெற்றுள்ளார். இதனால் தலைவர் பதவியை தொடர்ந்து துணை தலைவர் பதவியையும் அ.தி.மு.க. கைப்பற்றி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com