"பெண் காவலருக்கே இப்படி ஒரு கொடுமை.." - எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்

பழவந்தாங்கல் ரெயில் நிலையத்தில் பெண் காவலரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பணிபுரியும் பெண் காவலர் ஒருவர் பழவந்தாங்கல் ரெயில் நிலையத்தில் பாலியல் தாக்குதலுக்கு ஆளானதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

அதே பழவந்தாங்கல் ரெயில் நிலையத்தில் பட்டாக்கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் மர்மநபர்கள் வலம் வருவதாக செய்திகள் வருகின்றன.

பெண் காவலருக்கே பொது இடத்தில் இப்படியொரு கொடுமை நடக்கிறது என்றால், ஸ்டாலின் மாடல் ஆட்சியில் பெண்களுக்கு எள்ளளவும் பாதுகாப்பு இல்லை என்பதே உண்மை.

பொது இடத்தில் நடைபெறும் பாலியல் அத்துமீறலும், ஆயுத கலாச்சாரமும் தனிப்பட்ட விஷயங்கள் என்று இந்த ஸ்டாலின் மாடல் தி.மு.க. அரசு கடக்க முனைவது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

இவையெல்லாம் சட்டம் ஒழுங்கில் தான் வரும் என்பதாவது இன்றைக்கு முதல்-அமைச்சராக இருக்கும் மு.க.ஸ்டாலினுக்கு தெரியுமா..?

பெண் காவலர் மீது பாலியல் தாக்குதல் நடத்திய நபர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுப்பதுடன், தமிழ்நாடு முழுக்க தலைதூக்கியுள்ள ஆயுத கலாச்சாரத்தை ஒடுக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு ஸ்டாலின் மாடல் தி.மு.க. அரசை வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனிடையே சென்னை பழவந்தாங்கல் ரெயில் நிலையத்தில் பெண் காவலரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com