

மதுரை,
கல்லூரி மாணவரை அரிவாளால் வெட்டிய மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
மதுரை அலங்காநல்லூர் அருகே கோவில்பட்டியைச் சேர்ந்தவர் சஞ்சய். இவர் அப்பகுதியில் உள்ள கல்லூரியில் பயின்று வருகிறார். மாணவர் இன்று காலை கல்லூரி செல்வதற்காக அலங்காநல்லூர் அருகே சென்றுகொண்டிருந்த போது அவரை மர்ம நபர்கள் திடீரென வழிமறித்து அரிவாளால் தாக்கியதாக கூறப்படுகிறது.
இதில் படுகாயமடைந்த மாணவர் ரத்தம் சொட்டச் சொட்ட அருகில் உள்ள கிராமத்துக்குள் ஓடி, அங்கிருந்த பொதுமக்களிடம் தஞ்சம் அடைந்தார். காயமடைந்த அவரை உடனடியாக பொதுமக்கள் மீட்டு மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த அலங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவரை தாக்கியவர்கள் யார், எதற்காக தாக்குதல் நடத்தப்பட்டது என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.