சென்னையில் இருந்து சீரடி செல்லும் விமானம் திடீர் ரத்து - பயணிகள் போராட்டம்

சென்னையில் இருந்து சீரடி செல்லும் விமானம் திடீரென ரத்து செய்யப்பட்டதால் விமான நிலையத்தில் பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னையில் இருந்து சீரடி செல்லும் விமானம் திடீர் ரத்து - பயணிகள் போராட்டம்
Published on

சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு முனையத்தில் இருந்து சீரடிக்கு தனியார் பயணிகள் விமானம் பிற்பகல் 2.20 மணிக்கு புறப்பட்டுச் செல்ல இருந்தது. அந்த விமானத்தில் பயணம் செய்ய 154 பயணிகள் காத்திருந்தனர்.

ஆனால் சீரடி செல்லும் விமானம் காலதாமதமாக மாலை 4 மணிக்கு புறப்பட்டு செல்லும் என அறிவிக்கப்பட்டது. இதனால் பயணிகள் பாதுகாப்பு சோதனை முடித்து விமான நிலையத்தில் காத்திருந்தனர். ஆனால் திடீரென விமானம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இதனால் ஆத்திரமடைந்த பயணிகள், தனியார் விமான நிறுவன அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். விமானம் ரத்து என்பதை முன் கூட்டியே சொல்லி இருந்தால் பெங்களூரு வழியாக மாற்று விமானத்தில் சீரடி சென்றிருப்போம். ஆனால் காலதாமதமாக அறிவித்துவிட்டு கடைசி நேரத்தில் விமானம் ரத்து என்பதை ஏற்றுக் கொள்ள மாட்டோம். எனவே விமானத்தை இயக்க வேண்டும் என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பயணிகள் அனைவரும் கோஷமிட்டதால் சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

உடனடியாக விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள், போலீசார், விமான நிலைய அதிகாரிகள், தனியார் விமான நிறுவன அதிகாரிகள் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பயணிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

மாலை 6 மணிக்கு பிறகு புறப்படும் விமானம் இரவில் சீரடியில் சென்று தரை இறங்க முடியாது. எனவே அவசரமாக சீரடி செல்லும் பயணிகளை இரவு 7 மணிக்கு சென்னையில் இருந்து நாசிக் செல்லும் விமானத்தில், அனுப்பி வைப்பது என்றும், அவர்களை அங்கிருந்து சீரடிக்கு சாலை வழியாக வாகனத்தில் அழைத்துச் செல்வதாகவும் கூறினர்.

மேலும் சென்னையில் இருந்து நேரடியாக சீரடி செல்ல விரும்பும் பயணிகள் நாளை (அதாவது இன்று) விமானத்தில் அழைத்துச்செல்வதாகவும் சமாதானம் செய்தனர். அதை ஏற்று பயணிகள் அனைவரும் போராட்டத்தை கைவிட்டனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com