குறிஞ்சிப்பாடி வேட்பாளர் திடீர் மாற்றம்: கடலூரில் அ.தி.மு.க. அலுவலகம் சூறை அமைச்சர் எம்.சி.சம்பத்தின் காரை உடைத்ததால் பரபரப்பு

குறிஞ்சிப்பாடி அ.தி.மு.க. வேட்பாளர் ராம.பழனிசாமி திடீரென மாற்றம் செய்யப்பட்டார். இதனால் கடலூரில் உள்ள கட்சி அலுவலகத்தை அவரது ஆதரவாளர்கள் சூறையாடி, அமைச்சர் எம்.சி.சம்பத்தின் காரை அடித்து நொறுக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
குறிஞ்சிப்பாடி வேட்பாளர் திடீர் மாற்றம்: கடலூரில் அ.தி.மு.க. அலுவலகம் சூறை அமைச்சர் எம்.சி.சம்பத்தின் காரை உடைத்ததால் பரபரப்பு
Published on

கடலூர்,

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு அ.தி.மு.க. வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருந்த அமைச்சரின் ஆதரவாளரும், தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளருமான ராம.பழனிசாமியும் வேட்பு மனு தாக்கல் செய்ய ஆயத்தமானார்.

இந்நிலையில் நேற்று மாலை ராம.பழனிசாமியை மாற்றி விட்டு, அதற்கு பதிலாக முன்னாள் அமைச்சர் செல்விராமஜெயத்தை கட்சி தலைமை திடீரென அறிவித்தது.

இதனால் ஆத்திரமடைந்த ராம.பழனிசாமியின் ஆதரவாளர்கள் உடனடியாக கடலூர் பாதிரிக்குப்பத்தில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். மேலும் சிலர் திடீரென கட்சி அலுவலகத்திற்குள் புகுந்து, கல், கட்டையால் ஜன்னல் கண்ணாடிகளை அடித்து உடைத்தனர்.

பிரசார வாகனம் உடைப்பு

மேலும் அலுவலக வளாகத்திற்குள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த அமைச்சர் எம்.சி.சம்பத்தின் பிரசார வாகனத்தை அடித்து நொறுக்கினர். கண்ணாடிகளையும் சுக்கு நூறாக உடைத்தெறிந்தனர். அருகில் நின்ற மற்றொரு காரின் முன் பக்க கண்ணாடியையும் கல்லால் தாக்கி உடைத்தனர். பின்னர் அமைச்சா எம்.சி.சம்பத்தின் அறைக்கு சென்றனர். ஆனால் அவர் அங்கு இல்லாததால் அவரது இருக்கையை அடித்து நொறுக்கினர்.

மேஜையில் இருந்த கண்ணாடியையும் கீழே தூக்கி போட்டு உடைத்தனர். தொடர்ந்து கூட்ட அரங்கத்திற்குள் சென்ற அவரது ஆதரவாளர்கள் அங்கிருந்த நாற்காலிகளை தூக்கி வீசி உடைத்தனர். அப்போது அமைச்சரின் மகன் பிரவீன் கட்சி நிர்வாகிகள், ஆதரவாளர்களுடன் மேல் தளத்தில் இருந்து ஆலோசனை நடத்தினார். சத்தம் கேட்டதும் அவர் கீழே வந்தார். உடனே அவரை நோக்கி, ராம.பழனிசாமி ஆதரவாளர்கள் கல் வீசி தாக்க முயன்றதாக தெரிகிறது. இதனால் அவரை கட்சி நிர்வாகிகள் மேல் தளத்திற்கு அழைத்துச்சென்று விட்டனர்.

2 பேர் காயம்

இருந்தாலும் அவரை சிலர் தாக்க முயன்றதாக கூறப்படுகிறது. ஆனால் அவரது ஆதரவாளர்கள் அவரை காப்பாற்றி விட்டனர்.

இருப்பினும் இந்த தாக்குதலில் அமைச்சரின் ஆதரவாளர்கள் 2 பேருக்கு காயம் ஏற்பட்டது. அவர்கள் 2 பேரையும் கடலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.இதற்கிடையில் தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அப்போது ராம.பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்று விட்டனர்.

விரட்டியடிப்பு

ஒரு சிலர் அலுவலகத்தின் கீழ் புறம் நின்று அலுவலகத்தை நோக்கி கற்களை வீசினர். அவர்களை போலீசார் விரட்டி அடித்தனர். இதையடுத்து அவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். தொடர்ந்து அமைச்சரின் மகன் பிரவீனை போலீசார் பாதுகாப்புடன் அனுப்பி வைத்தனர்.

இருப்பினும் இந்த தாக்குதலால் கட்சி அலுவலகம் போர்க்களம் போல காட்சி அளித்தது. இது பற்றி கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com