

செங்கல்பட்டு,
செங்கல்பட்டு நகராட்சிக்குட்பட்ட குப்பைக் கிடங்கில் நள்ளிரவில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து காரணமாக, அப்பகுதி முழுவதும் நச்சுப்புகை சூழ்ந்து பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
செங்கல்பட்டு நகராட்சிப் பகுதியில் மலைபோல குவிக்கப்பட்டுள்ள குப்பைக் கிடங்கில், நேற்று முன்தினம் நள்ளிரவில் திடீரென தீப்பிடித்தது. குப்பைகளில் பரவிய தீ, காற்றின் வேகம் காரணமாக மளமளவென அடுத்தடுத்த பகுதிகளுக்கும் பரவி கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது. இதனால் அப்பகுதி முழுவதும் அடர்ந்த கரும்புகை மூட்டமாக மாறியது.
தீ விபத்தின் காரணமாக வெளியேறிய கடுமையான நச்சுப்புகை, அருகில் உள்ள குடியிருப்புகள் மற்றும் சுற்றுவட்டார கிராமப் பகுதிகளுக்குள் பரவியது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள், குறிப்பாக முதியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு கண் எரிச்சல், தொண்டை வலி மற்றும் கடுமையான மூச்சுத்திணறல் போன்ற சுவாசக் கோளாறுகள் ஏற்பட்டன. இதனால் நள்ளிரவில் மக்கள் கடும் அதிர்ச்சியும் அச்சமும் அடைந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு செங்கல்பட்டு தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்தனர். எனினும், தீயின் தீவிரம் அதிகமாக இருந்ததால், தீயைக் கட்டுப்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, மகேந்திரா சிட்டி உள்ளிட்ட பிற தீயணைப்பு நிலையங்களில் இருந்து கூடுதல் தீயணைப்பு வாகனங்கள் மற்றும் வீரர்கள் வரவழைக்கப்பட்டனர். தண்ணீரைப் பீய்ச்சியடித்தும், ஹி்ட்டாச்சி போன்ற எந்திரங்களைக் கொண்டு குப்பைகளை அப்புறப்படுத்தியும் பல மணி நேர தீவிரப் போராட்டத்திற்கு பிறகு தீ முழுமையாகக் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
இந்த குப்பைக் கிடங்கில் அடிக்கடி இதுபோன்ற தீ விபத்துகள் ஏற்படுவதால், அப்பகுதி மக்கள் தொடர்ந்து நச்சுப்புகைய சுவாசித்து சுகாதார சீர்கேட்டிற்கு ஆளாகி வருகின்றனர். எனவே, மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு இந்த குப்பைக் கிடங்கை உடனடியாக வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் அல்லது பயோ-மைனிங் முறையில் குப்பைகளைத் தரம் பிரித்து நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று நகராட்சி நிர்வாகத்திற்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இச்சம்பவம் குறித்து உள்ளூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, தீ விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.