பூந்தமல்லி அருகே சாலையில் சென்ற காரில் திடீர் தீ விபத்து

ஓடும் கார் திடீரென தீப்பிடித்த விபத்தில் சாப்ட்வேர் நிறுவன ஊழியர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.
பூந்தமல்லி அருகே சாலையில் சென்ற காரில் திடீர் தீ விபத்து
Published on

திருவள்ளூர்,

ஆவடி அடுத்த திருநின்றவூர் பகுதியைச் சேர்ந்தவர் ஹேமந்த் (30). தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்றி வரும் இவர், நேற்று இரவு வேலை முடித்துவிட்டு தனது காரில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.

பூந்தமல்லி அருகே சென்றுகொண்டிருந்தபோது, திடீரென காரின் முன்பகுதியில் இருந்து புகை வரத் தொடங்கியது. இதையடுத்து ஹேமந்த் உடனடியாக காரை சாலையோரத்தில் நிறுத்திவிட்டு கீழே இறங்கினார்.

அப்போது கார் திடீரென கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது. அதிர்ச்சி அடைந்த ஹேமந்த், தீயை அணைக்க முயன்றார். ஆனால் தீ வேகமாக பரவியதால் உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தார்.

தகவலின்பேரில் பூந்தமல்லி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, காரில் எரிந்துகொண்டிருந்த தீயை தண்ணீர் ஊற்றி அணைத்தனர். இருப்பினும் கார் முழுவதுமாக தீயில் எரிந்து நாசமானது.

இந்த சம்பவம் குறித்து நசரத்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், உரிய நேரத்தில் ஹேமந்த் காரில் இருந்து வெளியேறியதால் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com