

கோவை மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்று கோவை குற்றாலம். மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்யும் மழை நீரானது ஓடைகளில் வழிந்தோடி கோவை குற்றாலம் வருகிறது. இங்கு அருவிபோல் தண்ணீர் கொட்டுவதால் கோவை குற்றாலம் என அழைக்கப்படுகிறது. கோவையில் இருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ள இந்த அருவி வனத்துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ளது. வனத்துறையினர் அனுமதியுடன் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுகிறார்கள். கோவை மாவட்டம் மட்டுமல்லாது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வரும் சுற்றுலாப் பயணிகள் இங்கு ஆனந்தமாக குளித்துவிட்டு செல்கிறார்கள்.
தற்போது தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதால் கடந்த சில நாட்களாக அருவிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தவண்ணம் இருந்தது. வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.இந்தநிலையில் நேற்று கோவை குற்றாலம் பகுதியில் கனமழை பெய்தது. இதனால் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து கோவை குற்றாலத்தில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.
இதுபற்றி வனத்துறையினர் கூறுகையில், கோவை குற்றாலம் அருவியில் தற்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் பாதுகாப்பு நலன் கருதி கோவை குற்றாலம் அருவி இன்று முதல் தற்காலிகமாக மூடப்படுகிறது. அருவியில் மழையின் தீவிரம் குறையும்பட்சத்தில் சுற்றுலாப் பயணிகள் மீண்டும் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்றனர். இதற்கிடையே இன்று காலை கோவை மாநகர் உள்பட பல இடங்களில் பரவலாக மழை பெய்தது. பள்ளி, கல்லூரிகள் மற்றும் அலுவலகங்களுக்கு சென்றவர்கள் மழையில் நனைந்தபடி சென்றனர்.