

திண்டுக்கல்,
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்துள்ளது. கடந்த சில நாட்களாகவே மாலை நேரங்களில் மழை பெய்து வந்த நிலையில், இன்றைய தினமும் நீடித்த இந்த திடீர் மழையினால் மலைப்பகுதி முழுவதும் கடும் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் இன்று (வியாழக்கிழமை) பெய்த மிதமான மற்றும் கனமழை காரணமாக நகரின் தாழ்வான சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும், வளிமண்டல மேகமூட்டம் காரணமாக மலைப்பகுதி முழுவதும் பனிமூட்டம் சூழ்ந்துள்ளது. குறிப்பாக ஏரிச்சாலை, மூஞ்சிக்கல் மற்றும் பிரகாசபுரம் ஆகிய பகுதிகளில் அடர்ந்த பனிமூட்டம் சூழ்ந்துள்ளது. இதனால் எதிரே வரும் வாகனங்கள் கூட தெரியாத அளவிற்கு புகைமண்டலமாக காட்சியளிப்பதால், முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி வாகன ஓட்டிகள் மிக மெதுவாக வாகனங்களை இயக்கி வருகின்றனர்.
மழை காரணமாக கொடைக்கானலில் இன்று அதிகபட்ச வெப்பநிலை 22°C ஆகவும், இரவு நேரக் குறைந்தபட்ச வெப்பநிலை 18°C ஆகவும் குறைய வாய்ப்புள்ளது. காற்றில் ஈரப்பதம் 77 சதவீதமாக உயர்ந்துள்ளதால், சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் குளிர்கால உடைகளுடன் தங்களை பாதுகாத்துக் கொண்டுள்ளனர்.
திடீரென தரையிறங்கிய மேகக்கூட்டங்கள் மற்றும் இதமான குளிரால், கொடைக்கானலுக்கு வருகை தந்துள்ள சுற்றுலாப் பயணிகள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதற்கிடையே, இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள எச்சரிக்கையில், மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, நாளை (வெள்ளிக்கிழமை) மற்றும் சனிக்கிழமை ஆகிய 2 நாட்களும் கொடைக்கானலில் இடியுடன் கூடிய பலத்த கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே, மலைப்பாதைகளில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்குமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.